
உ.பி. தேர்தல் பிரசாரத்தில் நேற்று முதல் முறையாக களம் இறங்கிய பிரியங்கா காந்தி, ‘‘மாநிலத்தின் வளர்ச்சிக்கு ‘தத்துப் பிள்ளை’ தேவை இல்லை; மண்ணின் மைந்தர்களே போதும்’’ என, பிரதமர் மோடி மீது தாக்குதல் தொடுத்தார்.
உத்தரப்பிரதேச தேர்தலில் காங்கிரசின் நட்சத்திர பேச்சாளராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டு இருந்தார்.
முதல் பிரசாரம்
இதுவரை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பங்கேற்கவில்லை என்றாலும், அவருடைய தாயாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியாவின் நாடாளுமன்ற தொகுதியான ரேபரேலியில் நேற்று நடந்த பிரசாரத்தின்போது, பிரியங்கா முதன் முறையாக பங்கேற்றார்.
அவருடைய சகோதரரும், காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல் காந்தியும் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் திரளான பேர் கூடியிருந்தனர்.
தத்துப்பிள்ளை
பிரதமர் மோடியின் பிரசாரத்தின்போது தன்னை உ.பி.யின் தத்துப்பிள்ளை என்று கூறி இருந்தார். சோனியா தனது பிரசாரத்தின்போது, மோடியின் இந்த கருத்துக்கு எதிராக தாக்குதல் தொடுத்தார். அவர் பேசுகையில் கூறியதாவது-
‘‘பிரதமர் மோடி, வாரணாசி தன்னை தத்து எடுத்துக் கொண்டதாகவும், வாரணாசியின் மகன் போன்ற தான் அதன் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் என்றும் ஏற்கனவே கூறி இருந்தார்.
அப்போது ‘‘வெளியில் இருந்து ஒருவரை தத்து எடுக்க வேண்டிய அவசியம் உ.பி.க்கு இருக்கிறதா? என்ற கேள்வி எனக்கு எழுந்தது.
ராகுல்-அகிலேஷ்
மோடிஜி, இந்த மாநிலத்துக்கு வெளியில் இருந்து ஒருவரை ‘தத்து’ எடுக்க வேண்டிய அவசியம் உள்ளதா?. இந்த மாநிலத்தில் என்ன இளைஞர்கள் யாரும் இல்லையா...?
ராகுல்ஜி, அகிலேஷ்ஜி ஆகிய இரு இளைஞர்கள் உங்களிடம் உள்ளனர். அவர்களுடைய மனதிலும் இதயத்திலும் உ.பி.யின் நலன் உள்ளது. எனவே எந்த ஒரு வெளியாட்களும் தேவையில்லை.
வாரணாசியில்
இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் தலைவர்கள் ஆகலாம்... அவர்கள் ஒவ்வொருவரும் உ.பி.யின் வளர்ச்சிக்காக பாடுபட முடியும். இதுதான், ராகுல், அகிலேஷின் விருப்பம்.
வாரணாசி மக்களுக்கு மோடி ஏற்கனவே பல வெற்று வாக்குறுதிகளை வழங்கி இருந்தார். அதன்பின் பல ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்படி அங்கு ஏதாவது நடந்து இருக்கிறதா என வாரணாசி மக்களை கேளுங்கள்.
ராஜீவ் காந்தி
அதே நேரத்தில் அமேதி தொகுதி மக்களை கேளுங்கள், ராஜீவ் காந்தி என்ன சொன்னாரோ, அவர் பிரதமராக இருந்தபோது அவற்றைச் செய்தாரா? என்று.
பிரதமர் மோடி பெண்களை ‘‘சகோதரிகளே, தாய்மார்களே’’ என அழைக்கிறார். பெண்களை உறவு சொல்லி அவர் அழைக்க வேண்டியது இல்லை. அவர் ஏதாவது சொல்வதாக இருந்தால் உங்கள் கண்களைப் பார்த்து சொல்ல வேண்டும்.
300 தொகுதிகளில் வெற்றி
நமது மகள்கள், சகோதரிகள், பெண்களுக்கு எதிராக கடந்த 6 மாதங்களில் நடந்த கொடுமைகள் பற்றி அவர் சொல்ல வேண்டும். (ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு விவகாரத்தில்) மோடியின் நடவடிக்கையால் பெண்கள் அனைவருடைய சேமிப்பும் வீணாகி, அவர்களை வங்கிகள் முன்பு காத்திருக்க வைத்துவிட்டது.
உ.பி. வாக்காளர்கள் இந்தக் கூட்டணியை வலுப்படுத்தினால்தான் மாநிலத்தை வலுப்படுத்த முடியும். உ.பி.யில் மொத்தம் உள்ள 403 தொகுதியில் 300 தொகுதிகளில் நிச்சயம் காங்கிரஸ்-சமாஜ்வாதி கூட்டணி வெற்றி பெறும்’’.
இவ்வாறு பிரியங்கா கூறினார்.