
தேர்தல் பிரசாரத்தில் வார்த்தைகளையும், அறிக்கைகளையும் கவனமாக வெளியிட வேண்டும் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சர்ச்சைப் பேச்சு
கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த மாதம் 29-ந் தேதி மாநிலத்தில் சிம்பல் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் பேசினார். அப்போது, மக்களிடம் “ உங்களுக்கு வாக்களிக்க கட்சிகள் ரூ.500 கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால், வாக்கை பாரதிய ஜனதா கட்சிக்கு அளியுங்கள்'' என்று பேசியிருந்தார்.
புகார்
இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கோவா பார்வார்டு கட்சி மனோகர் பாரிக்கர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக புகார் அளித்தது. மக்கள் வாக்களிக்க லஞ்சம் பெறலாம் என்றுபேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்தால், பாரிக்கர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.
நோட்டீஸ்
இதையடுத்து, மனோகர் பாரிக்கருக்கு கடந்த 7-ந்தேதி நோட்டீஸ் அனுப்பி, தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. அதற்கு அவர் கடந்த 9-ந்தேதி பதில் அனுப்பி இருந்தார்.
எச்சரிக்கை
இந்நிலையில், தேர்தல் ஆணையம் மனோகர் பாரிக்கரை எச்சரித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உங்களின் பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியிருக்கிறது, எதிர்வரும் காலங்களில், பிரசாரக் கூட்டங்களில் அறிக்கைகளையும், பேச்சுக்களையும் கவனமாக பேச வேண்டும் என அறிவுறுத்துகிறோம் என எச்சரிக்கை செய்தனர்.