ஜி20 இரவு விருந்துக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
ஜி20 தலைவர்கள், வெளிநாட்டு பிரமுகர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கும் ஜி20 இரவு விருந்தில் கலந்து கொள்ள, அகில இந்திய காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
குடியரசுத் தலைவரின் ஜி20 விருந்துக்கான அழைப்பிதழில் ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்று பயன்படுத்தப்பட்டதாக எழுந்த விமர்சனங்களுக்கு மத்தியில் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
undefined
உலகத் தலைவர்கள் பங்கேற்கும் இந்த விருந்திற்கு அனைத்து மத்திய, மாநில அமைச்சர்கள், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் உட்பட அனைத்து மாநில முதல்வர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அதுதவிர, முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உள்பட 500க்கும் மேற்பட்ட இந்தியாவின் பணக்கார தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விருந்தினர் பட்டியலில் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், எச்.டி.தேவே கவுடா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்தியா வந்தடைந்தார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்!
அதேசமயம், இந்த நிகழ்ச்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற அவைத் தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ஓருவர் தெரிவித்துள்ளார். மேலும், ஜி20 மாநாட்டை அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக அரசாங்கம் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது, பல்வேறு விவகாரங்களில் மோதலில் இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் மோடி அரசுக்கும் இடையிலான உறவை மேலும் சீர்குலைக்கக்கூடும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரவு விருந்தில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.