
நக்சல் தளபதி மல்லோஜுலா வேணுகோபால் ராவ், என்கிற சோனு, சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் மூத்த தலைவர் மற்றும் அதன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், மேலும் 60 நக்சலைட்டுகளுடன், கட்சிரோலி காவல் தலைமையகத்தில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் சரணடைந்தார்.
அப்போது 60 மாவோயிஸ்ட் தொண்டர்களுடன் ராவ் தனது ஆயுதங்களைக் ஒப்படைத்தார்.
முறையான அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு முன் ஆலோசிக்க ஒரு மாத கால அவகாசம் கோரிய ராவ், இடைப்பட்ட காலத்தில் கட்சித் தொண்டர்கள் மீதான ஆயுத நடவடிக்கைகளை நிறுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். "நான் ஆயுதங்களைக் கீழே வைத்து, இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் இயக்கங்களின் ஒரு பகுதியாக மாறப் போகிறேன். மார்ச் 2025-ன் கடைசி வாரத்திலிருந்து, எங்கள் கட்சி அரசாங்கத்துடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. கட்சியின் தலைமைச் செயலாளர் மே மாதம் ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டார்,
அதில் ஆயுதங்களைக் கீழே வைப்பது குறித்து ஆலோசிக்க ஒரு மாத கால அவகாசம் கேட்டதோடு, போர்நிறுத்தத்திற்கான ஒரு வாய்ப்பையும் முன்வைத்தார். துரதிர்ஷ்டவசமாக, மத்திய அரசு அதற்குப் பதிலளிக்கவில்லை; மாறாக, அவர்கள் தங்கள் தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரித்துள்ளனர்," என்று அவர் கூறினார்.
பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறையினரின் தற்போதைய நடவடிக்கைகளுக்கு மத்தியில், நாங்கள் எங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, பிரதான நீரோட்டத்தின் ஒரு பகுதியாக மாற முடிவு செய்துள்ளோம். மத்திய உள்துறை அமைச்சரால் நியமிக்கப்பட்ட நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் முடிவை ஏற்கும் மக்களிடையே ஒரு குழுவை உருவாக்கி, அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்," என்று அவர் மேலும் கூறினார்.
"பல மாநிலங்களில் உள்ள எங்கள் தோழர்களுடனும், சிறைகளில் உள்ளவர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்த மத்திய அரசிடம் இருந்து ஒரு மாதம் அவகாசம் கேட்கிறோம். வீடியோ அழைப்புகள் மூலமாகவும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். காடுகளில் நடக்கும் ரத்தக்களரியை நிறுத்தி நீங்கள் வழங்கும் ஒரு மாத கால அவகாசத்தைப் பொறுத்து இது அமையும். எங்கள் கட்சி, இடதுசாரி அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்கள் தங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம், நாங்கள் அவற்றைப் பரிசீலிப்போம்."
நாடு முழுவதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மாநில அரசுகள் தலைமையிலான தொடர்ச்சியான மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.