
டாஸ்மாக் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது. சந்தேகம் இருந்தாலே அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வது எவ்வாறு சரியாகும்? எனவும் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், பார் உரிமம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாகவும், இதன் மூலம் ₹1,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக, 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை (ED) சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை, இன்று (அக்டோபர் 14, 2025) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் நடைபெற்றது.
அப்போது, உச்ச நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதுடன், கடும் கண்டனத்தையும் தெரிவித்தது.
"அமலாக்கத்துறை என்ன நினைத்துக்கொண்டு செயல்படுகிறது? மாநில விசாரணை அதிகாரத்தின் உரிமையைப் பறிக்க முயலுகிறதா?" எனக் கேட்ட தலைமை நீதிபதி, அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.
மேலும், "சந்தேகம் இருந்தாலே அலுவலகத்துக்குள் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்வது எவ்வாறு சரியாகும்? ஒரு அதிகாரி தவறு செய்திருந்தால், அவரிடம் தனிப்பட்ட முறையில் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். சிபிஐ கூட சோதனை செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அரசிடம் தகவல் அளிக்கிறது" என்றும் நீதிபதி கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.