கேவலமான கேள்விகளை கேட்பதாக கூறி நாடாளுமன்ற குழு விசாரணையில் இருந்து திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா வெளிநடப்பு செய்துள்ளார்
நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கு, திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா ரூ.2 கோடி லஞ்சம் பெற்றுள்ளார் என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவின் பேரில், நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரத்தில், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டது. அதன்படி, இன்று ஆஜரான மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எம்.பி.க்கள், நெறிமுறையற்ற கேள்விகளை கேட்பதாக குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தனர்.
ஆனால், விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை எனவும், கேள்விகளுக்கு பதிலளிக்காமல் இருக்கவே வெளிநடப்பௌ செய்ததாகவும் நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவரும், பாஜக எம்பியுமான வினோத் குமார் சோங்கர், குறுக்கு விசாரணையின் போது மஹுவா மொய்த்ரா ஒத்துழைக்கவில்லை என்றும் கேள்விகளை எதிர்கொள்வதைத் தவிர்ப்பதற்காக கூட்டத்திலிருந்து திடீரென வெளிநடப்பு செய்ததாகவும் கூறினார். “குழுவின் செயல்பாடு மற்றும் எனக்கு எதிராக ஆட்சேபனைக்குரிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன.” எனவும் அவர் கூறினார்.
மற்றொரு குழு உறுப்பினரான அபராஜிதா சாரங்கி கூறுகையில், மஹுவா மொய்த்ராவிடம் தர்ஷன் ஹிரானந்தனியின் வாக்குமூலத்தைப் பற்றி கேட்டபோது கோபமாக நடந்து கொண்டதாக கூறினார்.
அதேசமயம், மஹுவா மொய்த்ராவிடம் தனிப்பட்ட மற்றும் நெறிமுறையற்ற கேள்விகளை நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு கேட்டதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர், மேலும் எம்.பி.க்களில் ஒருவர் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது ஊடகங்களுக்கு அதனை கசியவிட்டார்.
“இது என்ன மாதிரியான சந்திப்பு? அவர்கள் எல்லாவிதமான கேவலமான கேள்விகளையும் கேட்கிறார்கள்.” என மொஹுவா மொய்த்ரா வெளிப்படையாக வருத்தப்பட்டார். அவரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் விசாரணை அறையை விட்டு வெளியேறியபோது செய்தியாளர்களிடம் இதனை மொஹுவா மொய்த்ரா தெரிவித்தார். மேலும், “எதையாவது எடுத்து பேசுகிறார்கள்; எதையாவது குப்பையாகப் பேசுகிறார்கள் 'உன் கண்களில் கண்ணீர் இருக்கிறது' என்று அவர்கள் சொன்னார்கள். என் கண்களில் கண்ணீர் இருக்கிறதா, நீங்கள் கண்ணீரைப் பார்க்கிறீர்களா.?” எனவும் மஹுவா மொய்த்ரா அப்போது கேள்வி எழுப்பினார்.
முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் அதானிக்கு எதிராக கேள்வி கேட்க மஹுவா மொய்த்ராவுக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக் கொண்டார். மேலும், மஹுவா மொய்த்ரா தனது நாடாளுமன்ற இணையதள கணக்கின் முகவரியையும், அதன் கடவுச்சொல்லையும் தம்மிடம் பகிர்ந்ததாகவும் தர்ஷன் ஹிராநந்தானி தெரிவித்தார். இதற்கு பிரதிபலனாக மஹுவா மொய்த்ராவுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த மஹுவா மொய்த்ரா, அதிகார அமைப்புகளை காட்டி தர்ஷன் ஹிராநந்தானியின் தொழிலை முடக்கி விடுவதாக பாஜகவினர் மிரட்டி இதுபோன்று சொல்லச் சொல்லியுள்ளதாக விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.