செல்போன் ஒட்டுக்கேட்பு குறுஞ்செய்தி தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பிய செல்போன் ஒட்டுக்கேட்பு தொடர்பான ஆப்பிள் நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை குறுஞ்செய்தி விவகாரம் குறித்து, மத்திய அரசின் இந்திய கணினி அவசரகால குழு (CERT-In) விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், அப்பிள் நிறுவனத்திற்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய தகவல் தொழிநுட்பத்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையில் CERT-In விசாரணைக்கு ஆப்பிள் நிறுவனம் ஒத்துழைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Meity-NSF ஆராய்ச்சி ஒத்துழைப்பு தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட மத்திய தகவல் தொழிநுட்பத்துறை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்த போது, “CERT-In தனது ஆய்வைத் தொடங்கியுள்ளது. அவர்கள் (ஆப்பிள்) இந்த விசாரணையில் ஒத்துழைப்பார்கள்.” என தெரிவித்துள்ளார்.
இந்திய கணினி அவசரநிலை குழு என்பது, கணினி பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழும் போது, அது தொடர்பாக விசாரணை செய்யும் அதிகாரம் கொண்ட தேசிய நோடல் ஏஜென்சியாகும்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி., சசி தரூர், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி, மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலருக்கு ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள் உங்கள் சாதனத்தை குறிவைக்கலாம்; உங்களது செல்பேசி தகவல்கள் திருடப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக பாஜகவில் புதிதாக ஸ்டார்ட் - அப் பிரிவு தொடக்கம்!
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தில் உள்ள மூன்று பேருக்கும் இதுபோன்ற எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி, அதானியை தொட்டவுடன் இது நடக்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் செல்போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், அந்த செய்திகளை பெற்றவர்களையும், ஆப்பிள் நிறுவனத்தையும் விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டிருந்த நிலையில், CERT-In தனது விசாரணையை தொடங்கியுள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆப்பிள் நிறுவனம், “அச்சுறுத்தல் நுண்ணறிவு சமிக்ஞைகளின் அடிப்படையில் 150 நாடுகளில் அதுபோன்ற அறிவிப்புகள் சென்றுள்ளன. அவை பெரும்பாலும் முழுமையற்றவை. சில சமயங்களில் ஐபோன் ஹேக் தொடர்பான செய்திகள் தவறான எச்சரிக்கைகளாக இருக்கலாம். இந்திய அரசு ஆதரவு நிறுவனம் முயற்சி என குறிப்பிட்டு கூறவில்லை.” என தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.