திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா வகித்த மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா வகித்த மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
தனது மக்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் அளிக்க வேண்டும் என்று கோரி மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்வி பாட்டி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹுவா மொய்த்ரா மக்களவையில் அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
மஹுவா மொய்த்ரா தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தனியிடம் இருந்து பணம் மற்றும் பரிசுகள் பெற்று நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்டதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டினார். இதன் விளைவாக மஹுவா மொய்த்ரா மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரித்த நாடாளுமன்ற நெறிமுறைக் குழு தன்னிடம் தகாத கேள்விகளைக் கேட்டதாக மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையின் போது அனைத்து விதிகளும் மீறப்பட்டதாகவும் அதனால்தான் விசாரணையில் இருந்து வெளியேறியதாகவும் அவர் கூறியுள்ளார்.