உச்ச நீதிமன்றத்தை நாடி தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா நிவாரணம் பெறலாம் என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றதாக எழுந்த புகாரில், நெறிமுறைக் குழு அறிக்கையின் பரிந்துரை நாடாளுமன்ற மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடி தகுதி நீக்கம் செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா நிவாரணம் பெறலாம் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், மூத்த வழக்கறிஞருமான கே.சி.கௌசிக் கூறுகையில், அரசியலமைப்பின் 32ஆவது பிரிவின் கீழ் நிவாரணம் கோரி மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றார்.
அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகளை அமல்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு ஒரு தனிநபருக்கு உரிமை உண்டு என்று பிரிவு 32 கூறுகிறது. எனவே, மஹுவா மொய்த்ரா மேல்முறையீடு செய்வதற்குப் பதிலாக, தீர்வுக்காக உச்ச நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் என்று கௌசிக் கூறினார்.
ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.சோதியும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 32ஆனது அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதையும், பாதுகாவலராகவும் செயல்படுவதையும் அவர் தனது மனுவில் சுட்டிக்காட்டி முறையிடலாம். மேலும், ரிட்களை வெளியிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது எனவும் அவர் கூறினார்.
“ஒவ்வொரு செயலுக்கும், எப்போதும் ஒரு பரிகாரம் உண்டு. முறையான மற்றும் சரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை என்பதை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து மஹுவா மொய்த்ரா மனு அளிக்க வேண்டும்.” எனவும் அவர் கூறினார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு: அமைச்சர் உதயநிதியிடம் 10 லட்சம் நிவாரண நிதியை வழங்கிய சிவகார்த்திகேயன்..
“அவருக்கு போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை அல்லது அவரது வாதங்கள் அல்லது உண்மைகளை பதிவு செய்ய அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறலாம். இதன் விளைவாகவே மக்களவையில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், நெறிமுறைக் குழுவின் உத்தரவு நியாயமற்றது மற்றும் தன்னிச்சையானது என்று அவர் கூறலாம்.” எனவும் நீதிபதி சோதி கூறினார்.
ஓய்வுபெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங் கூறுகையில், நெறிமுறைக் குழு தனக்கு எதிரான விசாரணையின் போது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இயற்கை நீதியை மறுத்து செயல்பட்டதாக உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை மஹுவா மொய்த்ரா தட்டலாம் என்றார். “நெறிமுறைக் குழு உத்தரவுக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்யலாம். நீதி மற்றும் நியாயமான விசாரணையின் கோட்பாடுகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளன என அவர் முறையிடலாம்.” என அவர் கூறினார்.