மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றமா? ஏக்நாத் ஷிண்டேவை கழற்றி விடும் பாஜக; அடுத்த முதல்வர் இவர்தான்!!

By Dhanalakshmi G  |  First Published Apr 18, 2023, 10:48 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.  


மகாராஷ்டிரா மாநில ஆட்சி அதிகாரம் மியூசிகல் சேர் மாதிரி மாறுதலுக்கு உள்ளாகி வருகிறது. சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே. பாஜக சார்பில் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராக இருக்கிறார். இந்த ஆட்சியின் ஆட்டமும் களையப்படுகிறது என்ற பேச்சு அடிபடுகிறது. அடுத்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் அஜித் பவார் முதல்வராக வாய்ப்பு இருக்கிறது என்று முணு முணுக்கப்படுகிறது. 

இதற்கு வலு சேர்க்கும் வகையில் இன்று நடக்கவிருந்த பேரணியை அஜித் பவார் ரத்து செய்து இருக்கிறார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு பாஜக தலைவர்கள் டெல்லிக்கு விரைந்து இருப்பதாகவும், ஆட்சி மாற்றம் விரைவில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

உச்ச நீதிமன்றம் எந்த நேரத்திலும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே மீதான தீர்ப்பை வழங்கலாம். ஆதலால், இந்த நேரத்தில் தனது நீண்ட நாள் கனவான முதல்வர் ஆசையை தீர்த்துக் கொள்ள அஜித் பவார் தயாராகி விட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அவருக்கு 35-40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால், கட்சி தாவல் தடை சட்டம் தடையாக இருக்காது என்று கூறப்படுகிறது. 

கடந்த 2019ஆம் ஆண்டில் இதேபோல் பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைக்க அஜித் பவார் தயாராகி விட்டார். ஆனால், கட்சியின் தலைவர் சரத்பவாரின் ஆதரவு இல்லாததால் அவரால் முதல்வர் பதவி கனவை நிறைவேற்ற முடியவில்லை. ஆதலால், தற்போது சரத் பவாரின் ஆசியுடன் ஆட்சி அமைக்க வேண்டும் அவருக்கு ஆலோசனை வழங்கப்படுகிறதாம். 

ஆனால், சரத் பவருக்கு பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க பிடிக்கவில்லையாம். இருந்தபோதும், அஜித் பவாரின் முடிவில் தலையிடாமல், அவருக்கு என்ன தோன்றுகிறதோ அதுமாதிரி செய்யுமாறு சரத் பவார் கூறிவிட்டாராம். தனது இறுதிக்கட்ட அரசியலில் பாஜகவுடன் இணைந்து செல்ல விரும்பவில்லை என்று சரத் பவார் கூறியதாக செய்திகள் வெளியாகிறது. கட்சித் தலைமைக்கு எதிராக சென்றால் அது தவறாகிவிடும், சரத் பவாருக்கு மராத்தா மக்களிடம் நல்ல செல்வாக்கு இருக்கிறது என்று சில விசுவாசிகள் கூறி வருகின்றனராம். ஆதலால், சில எம்எல்ஏக்கள் சரத் பவாரிடம் அனுமதி பெறுமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி டெல்லி சென்று ரகசியமாக அமித் ஷாவை அஜித் பவார் சந்தித்தாக செய்திகள் வெளியானது. அங்கு இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் முடித்துவிட்டு வந்ததாகவும் கூறப்பட்டது. இவருடன் கட்சியின் மூத்த தலைவர்களான பிரபுல் பட்டேல், சுனில் தட்கரேவும் சென்று இருந்தனர் என்றும் அப்போதே யார் யாருக்கு எந்த அமைச்சர் பொறுப்பு என்று இறுதி செய்யப்பட்டதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது. இதனால், வெளிப்படையாகவே ஏக்நாத் ஷிண்டேவை பாஜக ஒதுக்கி வருகிறது என்று  கூறப்படுகிறது.

8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு.! அச்சத்தில் இருந்து விடுபடும் பொதுமக்கள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் உத்தவ் தாக்கரே மற்றும் அவரது மகன் ஆதித்ய தாக்கரேவுக்கான ஆதரவு அதிகரித்து வருவதாகவும், இது பாஜகவுக்கு எதிராக திரும்பலாம் என்று அந்தக் கட்சி கருதுவதாக கூறப்படுகிறது. சிவசேனா கட்சியை உடைத்து வெளியே வந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கான ஆதரவு குறைந்து வருகிறது. மேலும், உத்தவ் தாக்கரேவிடம் இருந்த கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஷிண்டேவுக்கு சாதகமாக அமைந்தது. இதுவும் உத்தவுக்கு மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும், பாஜக சமீபத்தில் ரகசிய சர்வே ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி, சிவசேனா (உத்தவ் பிரிவு) ஆகியவை கொண்ட மகா விகாஸ் அகாதி கூட்டணி 40 தொகுதிகளில் 33 இடங்களை கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளது. இதுவும் பாஜகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையெல்லாம் கருதி மராத்தி என்ற அடையாளத்தைக் கொண்ட அஜித் பவாரின் தலைமையில் ஆட்சி நடத்த வேண்டும் என்பது பாஜகவின் கணக்காக இருக்கிறது. அதுவும், அதிக வாக்கு சதவீதத்தைக் கொண்ட அஜித் பவார் ஆட்சி அமைத்தால் மராத்தி மக்களின் அன்பை பெறலாம் என்பது பாஜகவின் எண்ணமாக இருக்கிறது. 

கடந்த வாரம் டெல்லியில் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே ஆகியோரை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்து பேசி இருந்தார். ஆனால், இந்த சந்திப்பின்போது, பிரபுல் பட்டேல் கலந்து கொள்ளவில்லை. எனவே, அஜித் பவார், சுனில் தட்கரே இருவரை பாஜகவுக்கு இழுப்பது பிரபுல் தான் என்று சரத் பவார் பலமாக நம்புகிறார். இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர்களிடம் அஜித் பவார் கையெழுத்து வாங்கி இருப்பதாக லேட்டஸ்ட் செய்தி வெளியாகியுள்ளது. 

அஜித் பவார் உடனடியாக பாஜகவில் சேராவிட்டாலும், சிவசேனா வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு முடிவெடுப்பார் என்று தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். “அஜித் பவாரை ஈர்ப்பது பாஜகவின் பிளான் பி என்று தோன்றுகிறது. குறிப்பாக கஸ்பா சட்டமன்ற இடைத்தேர்தலில் அவமானகரமான தோல்விக்குப் பிறகு, மேற்கு மகாராஷ்டிராவில் பாஜக வலுவான முகத்தைத் தேடுகிறது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸிடம் இருந்து பாஜக அந்த இடத்தை இழந்து வருகிறது,” என்றார்.

Karnataka Election 2023 : கர்நாடக பாஜகவின் முகம்.. காங்கிரஸ் கட்சிக்கு தாவல் - யார் இந்த ஜெகதீஷ் ஷெட்டர்?

click me!