மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்… நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் அழைப்பு!!

By Narendran SFirst Published Jun 28, 2022, 10:54 PM IST
Highlights

ஜூன் 30ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். 

ஜூன் 30ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். மேலும் தன்னுடன் சிவசேனா எம்எல்ஏக்கள் 42 பேர் உட்பட 50 எம்எல்ஏக்கள் இருப்பதாக ஷிண்டே தெரிவித்து வருகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அவர்கள் அசாம் மாநிலம், கவுகாத்தி ஓட்டலில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, மாநிலம் முழுவதும் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் அரசுக்கு எதிராக அசாம் ஹோட்டலில் முகாமிட்டிருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் 23 ஆம் தேதி அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு கடிதம் எழுதினர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் நீடிக்கும் அரசியல் குழப்பம்... அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் யாருக்கு பலம் உள்ளது என்பதை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் முடிவு செய்யலாம் என சிவசேனா கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.  இதற்கிடையே மகாராஷ்டிரா அரசுக்கும் கட்சியின் தலைமைக்கும் எதிராகவும், தலைமையின் உத்தரவை மீறி கூட்டத்தை புறக்கணித்த அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி துணை சபாநாயகரை சிவசேனா கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு தகுதி நீக்க நோட்டீஸை துணை சபாநாயகர் அனுப்பி வைத்தார். இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு துணை சபாநாயகர் அனுப்பி வைத்த தகுதிநீக்க நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் சிவ சேனா கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்தது!!

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிரா அரசு, துணை சபாநாயகர், சட்டசபை செயலர் உட்பட அனைத்து தரப்பும் பதிலளிக்க உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் அதுவரை 16 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. இதனிடையே மகாராஷ்டிராவில் ஜூலை 22 முதல் 24 தேதி வரை அரசு எடுத்த தீர்மானங்கள் குறித்து ஆளுநர் விளக்கம் கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் ஜூன் 30ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை இல்லாத சூழலில் உத்தவ் தாக்ரே அரசு கவிழும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், டெல்லியில் இருந்து திரும்பிய பின் மும்பை ராஜ்பவனில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்துள்ளார். இதனால் மகாராஷ்டிராவில் தொடர்ந்து பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருகிறது. 

click me!