மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்.. அரசு இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் வெளியேறினார் முதல்வர் உத்தவ் தாக்கரே.!

By Kevin KaarkiFirst Published Jun 22, 2022, 10:38 PM IST
Highlights

மகாராஷ்டிரா மாநில மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டோ முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 2019 சட்டப் பேரவை தேர்தலில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மேலும் தேர்தலிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் இந்த கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, யார் ஆட்சி செய்வது என்ற கேள்வி எழுந்தது. மேலும் முதல்வர் நாற்காலிக்கு இரு கட்சிகள் இடையே விரிசல் ஏற்பட்டதால், கூட்டணியும் உடைந்தது. 

இதை அடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புது கூட்டணி அமைத்து மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதவி ஏற்றார். இவரின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படாமல் இருந்த நிலையில், தற்போது அம்மாநில அரசு கவிழும் சூழல் உருவாகி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநில மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டோ முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர் கொடி தூக்கி இருக்கிறார்.

ஆட்சிக்கு எதிராக போர் கொடி:

மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க. கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களில் 40-க்கும் மேற்பட்டோர் போர் கொடி தூக்கி உள்ளனர். மேலும் சிவசேனா கட்சி மூத்த தலைவர் ஏக்னாத் ஷிண்டோவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள்  46 பேர் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் தங்கி உள்ளனர். 

சமீபத்திய முடிவுகளால் மகாராஷ்டிரா மாநில அரசியல் களத்தில் குழப்பம் ஏற்பட்டு இருப்பதை அடுத்து, சிவசேனா கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் மற்றும் எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தான். மாநிலத்தின் முதலமைச்சராக அவர் தொடர்ந்து நீடிப்பார். வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் சட்டசபையில் நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுவோம்,” என அவர் தெரிவித்தார்.

வெளியேறிய முதல்வர்:

இந்த நிலையில், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது குடும்பத்தாருடன் அரசு இல்லத்தில் இருந்து வெளியேறினார். பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு இருக்கும் நிலையில், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாளர்கள் முதல்வர் இல்லத்தின் வெளியே கூடி இருந்தனர். முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டில் இருந்து வெளியே வந்ததும், உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவான கோஷங்களை அவர்கள் எழுப்பினர்.

click me!