பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் தை அமாவாசையன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 15 பேர் உயிரிழந்தனர். தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமாக மகா கும்பமேளா திகழ்கிறது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ஜனவர 13ம் தேதி முதல் மகா கும்பமேளா விழா தொடங்கி பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான மக்கள் விழாவில் பங்கேற்று வருகின்றனர். திரிவேணி சங்கமத்தில் நாள்தோறும் ஏராளமானோர் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். இதுவரை 15 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில் இன்று தை அமாவாசை என்பதால் புனித நீராடலுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் கூடியிருந்தபோது கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் கடும் நெரிசல் எற்பட்டது. அதுமட்டுமல்லாமல் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்ட நெரிசலால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலர் மயங்கி விழுந்தனர்.
இதையும் படிங்க: மகா கும்ப மேளா 2025: சங்கமத்தில் புனித நீராடி மகிழ்ந்த அமித் ஷா, யோகி ஆதித்யநாத்!
இந்நிலையில் பிரயாக்ராஜில் நடக்கும் கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாட்சிகள் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நெரிசலில் ஏராளமான குடும்பங்கள் பிரிந்து போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சுற்றுலா பயணிகளின் வருகை 65 கோடியாக அதிகரிப்பு!
இந்த சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த போலீசார், மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்கள் கும்பமேளா மைதானத்தின் 2வது பிரிவில் உள்ள தற்காலிக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அன்றைய அமிர்த ஸ்நானத்தை அகாரா பரிஷத் ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுக்கள் கொண்டு வர பக்தர்கள் சங்கமத்தில் புனித நீராடிவிட்டு அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து பிரயாக்ராஜ் கும்பமேளாவில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல் நிலைமை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.