மகளிருக்கு ரூ.1500, பழைய ஓய்வூதிய திட்டம்: வாக்குறுதிகளை அள்ளி வீசிய கார்கே!

By Manikanda PrabuFirst Published Aug 22, 2023, 5:22 PM IST
Highlights

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளது. அம்மாநில சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளதால், மத்தியப்பிரதேச அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில், மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநிலம், பண்டேல்கண்ட் பகுதியில் உள்ள சாகர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியின் பரிந்துரையின் பேரில் அனுமதிக்கப்பட்ட பந்தல்கண்ட் திட்டத்தை பாஜக அரசு செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எதையும் செய்யவில்லை என்றும் அப்போது கார்கே குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன் துயர் நீங்கும் என தெரிவித்த மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் ஆட்சியமைந்ததும் சமையல் எரிவாயு ரூ.500க்கு கிடைக்கும்; மகளிருக்கு மாதந்தோறும் 1500 நிதியுதவி அளிக்கப்படும் என்றார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் எனவும், மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.

பட்டியலின சமூகத்தின் போற்றுதலுக்குரிய நபரான சாந்த் ரவிதாஸுக்கு நினைவுச்சின்னம் மற்றும் கோவிலுக்கு பிரதமர் மோடி இந்த மாத தொடக்கத்தில் ரூ.100 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டியதைக் குறிப்பிட்ட கார்கே, சாகரில் புனித ரவிதாஸ் கோவிலுக்கு அடிக்கல் நாட்டுகின்றனர்; டெல்லியில்  அதனை இடிக்கின்றனர் என குற்றம் சாட்டினார். தேர்தலின் போதுதான் பிரதமர் மோடிக்கு ரவிதாஸ் நினைவுக்கு வருவதாகவும் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டினார்.

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு ரூ.50,000 அபராதம்: பெங்களூரு மாநகராட்சி அதிரடி!

மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் மல்லிகார்ஜுன கார்கே அப்போது உறுதியளித்தார்.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மத்தியப்பிரதேச மாநிலத்தில் தலித்துகளின் மக்கள் தொகை 1.13 கோடி. மத்தியப்பிரதேசத்தின் வடகிழக்கில் உள்ள பண்டேல்கண்ட் பிராந்தியத்தில், ஆறு  சட்டமன்றத் தொகுதிகள் ரிசர்வ் தொகுதிகளாகும். கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில் பினா, நரியோலி, ஜதாரா, சண்டாலா மற்றும் ஹட்டா ஆகிய ஐந்து இடங்களில் பாஜக வென்றது. குன்னோர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

பண்டேல்கண்ட் பிராந்தியத்தில் மொத்தம் 26 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் 15 தொகுதிகளில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!