மத்தியப்பிரதேச அமைச்சரவை விரிவாக்கம்: 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

By Manikanda PrabuFirst Published Dec 25, 2023, 8:45 PM IST
Highlights

மத்தியப்பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள் 28 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 163 இடங்களிலும், காங்கிரஸ் 66 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம், தனிப் பெரும்பான்மை கட்சியாக உருவெடுத்த பாஜகவின் சட்டமன்றக் கட்சி தலைவராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, மத்தியப்பிரதேச மாநில முதல்வராக கடந்த 13ஆம் தேதியன்று மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார். மேலும், ஜக்தீஸ் தேவுடா, ராஜேந்திர சுக்லா ஆகிய இரண்டு பேர் துணை முதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் சிங் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Latest Videos

இந்த நிலையில், மத்தியப்பிரதேச அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான மத்தியப் பிரதேச அமைச்சரவையில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரஹலாத் படேல், பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியா உட்பட 28 சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

மொத்தம் 28 பேரில், 18 எம்எல்ஏக்கள் கேபினட் அமைச்சர்களாகவும், தன்னிச்சை பொறுப்பில் உள்ள ஆறு பேர் உள்பட 10 பேர் மாநில இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். அம்மாநில ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் அவர்களுக்கு ஆளுநர் மங்குபாய் சிங் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விஜய் ஷா, கைலாஷ் விஜயவர்கியா, பிரஹலாத் படேல், கரண் சிங் வர்மா, ராகேஷ் சிங், உதய் பிரதாப் சிங், சம்பதியா உகே, துளசிராம் சிலாவத், ஐடல் சிங் காஞ்சனா, கோவிந்த் சிங் ராஜ்புத், விஸ்வாஸ் சாரங், நிர்மலா பூரியா, நாராயண் சிங் குஷாவாஹா, நாகர் சிங் சௌஹான், பிரத்யும்ன சிங் தோமர், ராகேஷ் சுக்லா, சைதன்யா காஷ்யப் மற்றும் இந்தர் சிங் பர்மர் ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

கிறிஸ்தவ சமூகத்தின் பங்களிப்பை பெருமையுடன் அங்கீகரிக்கும் இந்தியா: பிரதமர் மோடி!

கிருஷ்ணா கவுர், தர்மேந்திர பாவ் லோதி, திலீப் ஜெய்ஸ்வால், கௌதம் டெட்வால், லகான் படேல் மற்றும் நாராயண் சிங் பவார் ஆகியோர் தன்னிச்சை பொறுப்பில் உள்ள மாநில அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். நரேந்திர சிவாஜி படேல், பிரதிமா பக்ரி, திலீப் அஹிர்வார் மற்றும் ராதா சிங் ஆகியோர் மாநில இணை அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான அமைச்சரவையில் சம்பாடியா, உய்கே, நிர்மலா பூரியா, கிருஷ்ணா கவுர், பிரதிமா பக்ரி மற்றும் ராதா சிங் ஆகிய ஐந்து பெண் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மோகன் யாதவ், துணை முதல்வர்கள் ஜக்தீஸ் தேவுடா, ராஜேந்திர சுக்லா ஆகிய இரண்டு பேர், தற்போதைய 28 பேர் என அம்மாநில அமைச்சரவையின் மொத்தம் பலம் 31ஆக உயர்ந்துள்ளது. 230 எம்எல்ஏக்களைக் கொண்ட மத்தியப் பிரதேச அமைச்சரவையின் அதிகபட்ச பலம் முதல்வர் உட்பட 35ஆக இருக்கலாம்.

click me!