புதிய ரயில் பாதைகளை அமைக்க அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய ரயில்வே ரூ.7 ட்ரில்லியன் முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்திய ரயில்வே தனது வலையமைப்பை நவீனப்படுத்தவும், ரயில்களின் வேகத்தை அதிகரிக்கவும் 50,000 கிலோமீட்டர் (கிமீ) புதிய ரயில் பாதைகளை அமைக்க அடுத்த பத்தாண்டுகளில் குறைந்தது ரூ.7 ட்ரில்லியன் முதலீடு செய்யவுள்ளதாக ரயில்வே அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் புதிய பாதைகளை அமைப்பதில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தால் உற்சாகமடைந்துள்ள இந்திய ரயில்வே, வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களைக் கையாளக்கூடிய நவீன பாதைகளுடன் இணைப்பை மேம்படுத்துவதற்கான பணி முறைக்கு இப்போது செல்ல விரும்புகிறது என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
undefined
புதிய தடங்களை அமைப்பது இந்திய ரயில்வேயின் தொலைநோக்கு திட்டம் 2047 ஆவணத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இதன் கீழ் அடுத்த 25 ஆண்டுகளில் ரூ.15-20 டிரில்லியன் செலவில் சுமார் 100,000 கிமீ பாதைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
“2022-23ல் 5,200 கிமீ புதிய தடங்களை ரயில்வே வெற்றிகரமாக அமைத்துள்ளது. இந்த ஆண்டும் அதையே எதிர்பார்க்கிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்த வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதே இலக்கு. அதே நேரத்தில் பழைய பழுதடைந்த தடங்களை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தி, நவீன அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளைக் கையாளும் திறன் கொண்ட வலுவான ரயில்வே உள்கட்டமைப்பை முன்வைக்க வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுகவின் அடுத்த டார்கெட் யார்? திட்டம் போடும் பாஜக... அமைச்சரவை மாற்றம்: ஸ்டாலின் எடுக்கும் முடிவு!
இந்தியாவின் ஒவ்வொரு பகுதிக்கும் நவீன ரயில்வே உள்கட்டமைப்பைக் கொண்டு வருவதற்கு புதிய தடங்கள் அமைப்பதில் இந்திய ரயில்வே முக்கிய கவனம் செலுத்தும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் 5,000-5,500 கிமீ புதிய பாதைகள் அமைக்க ரூ.50,000 கோடி ஒதுக்கப்படும் என்று அதிகாரி மேலும் கூறியுள்ளார். இது புதிய தடங்களுக்கான 2024ஆம் நிதியாண்டு பட்ஜெட் மதிப்பீடான ரூ.31,850 கோடியை ஒப்பிடும் போதும் அதிகமாகும்.
தற்போதைய செலவில், 1 கி.மீ., பாதை அமைக்க, ரூ.15 கோடி செலவாகும். இது எஃகு போன்ற அடிப்படை தேவைகளின் விலைகள் மற்றும் தடங்கள் அமைப்பதற்கான நிலத்தின் இருப்பைப் பொறுத்து மாறுபடும். அனைத்து புதிய பாதைகளும் 180 கிமீ வேகத்தை தொடக்கூடிய வந்தே பாரத் போன்ற அதிவேக மற்றும் செமி-ஹைஸ்பீடு ரயில்களின் தேவைகளை பூர்த்தி செய்வதை ரயில்வே உறுதி செய்யும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.