
கோயிலுக்குள் நடனமாடி அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்கு கண்டனம் வலுத்ததை அடுத்து மனீஷா ரோஷன் மன்னிப்பு கோரியிருந்தார்.
சாப்பிடுவது, தூங்குவது, பாடுவது, என அனைத்தையும் வீடியோவாக பதிவுசெய்து அற்ப லைக்குகளுக்காக சமூக வலைதளங்களில் பதிவிடும் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதில் சில மோசமான நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. பல குற்றச்செயல்களுக்கு அடித்தளம் அமைக்கும் விதமாக ஒரு சில வீடியோக்கள் அமைந்து விடுகின்றன.
மத்தியபிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற மகாகாளிஸ்வர் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே, சில தினங்களுக்கு முன்னர் இந்த கோயிலுக்குச் சென்ற மனீஷா ரோஷன் என்ற இளம்பெண், கோயிலின் உள்ளே இந்தி சினிமா பாடலுக்கு நடனமாடி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
மனீஷா ரோஷனின் நடன அசைவுகளில் விழுந்த நெட்டிசன்களும் அந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்தனர். கோயிலுக்குள் இளம்பெண் செய்த செயலுக்கு பல தரப்பிலும் கண்டனக் குரல்கள் வலுத்தன. இதையடுத்து அலறியபடியே மன்னிப்பு கேட்டு புதிய வீடியோவை வெளியிட்டார் மனீஷா.
ஆனாலும், இளம்பெண்ணுக்கு பாடம் புகட்ட பல தரப்பிலும் வலியுறுத்தியதால், மனீஷா மீது வழக்குப்பதிய மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டார். இதையடுத்து மனீஷா மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.