இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி என்றால், குஜராத்தில்தான் நடத்துவோம்... ஐஒஏ ஆசை நிறைவேறுமா..?

By Asianet TamilFirst Published Oct 11, 2021, 9:20 PM IST
Highlights

இந்தியாவில் 2036-ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டி நடத்த வாய்ப்பு கிடைத்தால், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில்தான் நடத்துவோம் என்று இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.
 

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். அண்மையில் ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2024-இல் பாரீஸ் நகரிலும், 2028-இல் லாஸ் ஏஞ்சல்ஸிலும், 2032-இல் பிரிஸ்பேன் நகரிலும் நடைபெற உள்ளன. 2036-இல் எந்த நகரில் இந்தப் போட்டி நடைபெறும் என்பது அறிவிக்கப்படவில்லை. இந்தப் போட்டியை இந்தியா இதுவரை நடத்தியதில்லை. ஆனால், அவ்வப்போது அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது உண்டு.
 இந்நிலையில் இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்தால் எந்த நகரில் நடைபெறும் என்பது பற்றி  இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ) தலைவர் நரிந்தர் பத்ரா பேட்டி அளித்துள்ளார். “ஒருவேளை 2036-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தால், அதன் தொடக்க விழாவை எங்கு நடத்துவோம் என்றால், நிச்சயமாக அகமதாபாத் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை நோக்கிதான் கையை நீட்டுவேன்.
இந்தியாவில் ஒலிம்பிக் தொடக்க விழாவை நடத்த இதைவிடப் பொருத்தமான இடம் நிச்சயமாக வேறு இருக்க முடியாது. தொடக்க விழா நடக்கும்  இந்த மைதானத்தில்தான் தடகள போட்டிகளும் நடைபெறும். அதற்கு சரியான இடமாக அகமதாபாத் மைதானம் இருக்கும்.” என்று நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார். 

click me!