லக்கீம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சரை டிஸ்மிஸ் செய்யுங்க.. மெளன விரத போராட்டம் நடத்திய பிரியங்கா..!

By Asianet TamilFirst Published Oct 11, 2021, 9:06 PM IST
Highlights

லக்கீம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மெளன விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
 

உத்தரபிரதேசத்தில் லக்கீம்பூரில் கடந்த 3-ஆம் தேதி அன்று போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் காரை மோதியதாகப் புகார் எழுந்தது. இதில், விவசாயிகள் சிலர் உயிரிழந்தார்கள். மேலும் இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தில்  விவசாயிகள், பத்திரிக்கையாளர் என 8 பேர் உயிரிழந்தார்கள். விவசாயிகளின் மீது மோதிய காரில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, இந்தச் சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இந்த விவகாரத்தில் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அவரையும் கைது செய்ய வேண்டும் என்று விவசாய அமைப்புகள், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் அஜய் மிஸ்ராவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று லக்னோவில் மெளன விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். 
அவருடன் காங்கிரஸ் தலைவர்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். லக்னோவில் உள்ள காந்தி சிலை முன்பாக அமர்ந்து பிரியங்கா காந்தி ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
 

click me!