குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி முடிந்த நிலையில், அடுத்தடுத்தக்கட்ட வாக்குப்பதிவுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 26 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக மே மாதம் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சூரத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டது. அவரை முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில் முரண்பாடுகள் இருப்பதாக கூறு அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதேபோல், காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பத்சலாவின் வேட்புமனுவும் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி, பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர சூரத் தொகுதியில் போட்டியிட 8 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில் 7 பேர் சுயேச்சைகள். ஒருவர் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் பியாரேலால் பாரதி ஆவர். வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். இதனிடையே, இந்த 8 வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர்.
இதனால், குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் அதிகாரி விரைவில் வெளியிடுவார் என தெரிகிறது. அதேசமயம், காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் செல்லவுள்ளதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கு பாஜக என்ன செய்தது: பிரதமர் மோடி விளக்கம்!
இதனிடையே, “பிரதமர் நரேந்திர மோடிக்கு சூரத் முதல் வெற்றியை வழங்கியுள்ளது. சூரத் மக்களவை தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் வேட்பாளர் முகேஷ் தலாலை வாழ்த்துகிறேன்.” என குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.
માનનીય પ્રધાનમંત્રી શ્રી નરેન્દ્રભાઇ મોદી સાહેબને સુરતે પહેલું કમળ અર્પણ કર્યું !!
સુરત લોકસભા બેઠકના ઉમેદવાર શ્રી મુકેશભાઇ દલાલને બિનહરીફ ચૂંટાવવા બદલ ખૂબ ખૂબ અભિનંદન અને શુભેચ્છાઓ પાઠવ્યા !! pic.twitter.com/w87WSrla5s
குஜராத் முதல்வர் பூபேந்திர படேலும், முகேஷ் தலாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவின் “வரலாற்று வெற்றியின் தொடக்கம்” என்று தலாலுக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.