Lok Sabha Election 2024 : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், தேர்தல் குறித்த பல தகவல்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான அட்டவணையை வரும் மார்ச் 13க்குப் பிறகு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று, ECI வெளியிட்ட சில தகவல்களை மேற்கோள் காட்டி பிரபல செய்தி நிறுவனம் இன்று தகவல் அளித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் தேர்தல் ஆணையத்தின் குழுக்கள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள், பல்வேறு மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் (CEOs) தங்களது வழக்கமான கூட்டங்களை நடத்தி, தேர்தலுக்கு முன்னதாக பிரச்னைக்குரிய பகுதிகளைக் கண்டறிந்து வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) இயக்கம், பாதுகாப்புப் பணியாளர்களின் தேவை, மாநில எல்லைகளில் கண்காணிப்பு போன்ற நடைமுறை சிக்கல்களை ECI ஆலோசித்து வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
தொடரும் இழுபறி... எடப்பாடி பழனிசாமியை வீட்டிற்கே சென்று சந்தித்த பாமக எம்எல்ஏக்கள்.! காரணம் என்ன.?
மேற்கு வங்கம், பீகார், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் பிற மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் வரும் வாரங்களில் செல்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதில் ஏற்கனவே தமிழகத்திற்கு இரு நாள் பயணமாக தலைமை தேர்தல் ஆணையர் தனது 3 பேர் கொண்ட குழுவுடன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த குழு மார்ச் 13ம் தேதி ஜம்மு காஷ்மீர் செல்லும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு லோக்சபா தேர்தலில் வாக்களிக்க கிட்டத்தட்ட 97 கோடி இந்தியர்கள் தகுதி பெறுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 2019 முதல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 6% அதிகரித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் வாக்காளர் பட்டியலை முன்கூட்டியே வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.