
தேர்தல் செலவினங்களைக் குறைக்கும் வகையில் மக்களவை மற்றும் மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி யோசனை தெரிவித்திருந்தார். இதனால் தங்கள் கட்சிக்கும் இழப்பு இருக்கிறது என்பதால் இந்த திட்டத்தில் உள்ள நல்லதைப் பாருங்கள்; இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
ஏற்கனவே மத்திய அரசு ஒதுக்கிய நிதி மூலம் புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2018 செப்டம்பரில் 40 லட்சம் ஒப்புகை சீட்டுடன் கூடிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும். எனவே 2018 செப்டம்பர் மாதத்தில் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது.
இதுதொடர்பாக தேசிய மற்றும் பிராந்திய கட்சிகளின் ஆதரவைப் பெற்று சட்டரீதியான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது மத்திய அரசு கையில்தான் உள்ளது என தேர்தல் ஆணையர் ராவத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து கட்சிகளின் ஆதரவையும் திரட்டி மத்திய அரசு நினைத்ததை சாதிக்கிறதா என்பதைப் பார்ப்போம்..