மின்கட்டண உயர்வைத் தொடர்ந்து இதுவும் அதிகரிப்பு: இலவசத்தை சமாளிக்க அரசு எடுக்கும் ஆயுதமா?

By Manikanda PrabuFirst Published Jun 7, 2023, 3:58 PM IST
Highlights

மின்கட்டண உயர்வைத்தொடர்ந்து கர்நாடகாவில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது

கர்நாடக மாநிலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் கொடுத்துள்ள காங்கிரஸ் அரசு, மதுப்பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. மதுபானங்களின் விலை, பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை  உயர்த்தப்பட்டுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, க்ருஹ ஜோதி திட்டத்தில் வீடுகளுக்கு மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், க்ருஹ லட்சுமி திட்டத்தில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும், அன்னபாக்யா திட்டத்தில் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும், சக்தி திட்டத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்படும். யுவநிதி திட்டத்தில் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவ‌ர்களுக்கு ரூ.1,500 அடுத்த 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ளது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி அளித்த ஐந்து முக்கிய வாக்குறுதிகளுக்கும் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் அடுத்தடுத்து அமலுக்கு வரவுள்ளதற்கிடையே, அம்மாநில அரசு மின்கட்டணத்தை யூனிட்டுக்கு ரூ.2.89 உயர்த்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது மதுபானங்களின் விலையையும் அம்மாநில காங்கிரஸ் அரசு உயர்த்தியுள்ளது. மின் கட்டண உயர்வால் பொதுமக்களுக்கு அடித்த ஷாக் இன்னும் நீங்காத நிலையில், மதுபானங்களின் விலை, பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை  உயர்த்தப்பட்டுள்ளது.

விஸ்கி, பிராந்தி, ரம், பீர் உள்ளிட்ட சரக்குகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பட்வைசர் பீர் ரூ.198இல் இருந்து ரூ.220 ஆக அதிகரித்துள்ளது. கிங் ஃபிஷர் பீர் விலை ரூ.160இல் இருந்து ரூ.170ஆக அதிகரித்துள்ளது. யூபி பிரீமியம் ரூ.125இல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த மே மாதம் அம்மாநிலத்தில் மின் கட்டணம் யூனிட்டுக்கு 70 பைசா உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், கர்நாடகா மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (KERC) மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ‘எரிபொருள் மற்றும் மின் கொள்முதல் செலவு சரிசெய்தல் கட்டணம்’ (FPPCA) என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கான மின்கட்டணத்தை 41 பைசாவிலிருந்து 50 பைசாவாக உயர்த்தி அம்மாநிலத்தின் பல்வேறு மின்வாரியங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட கட்டணம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 2.89 உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி!

ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை எரிசக்தித் துறை செலுத்திய கூடுதல் எரிபொருள் மற்றும் மின்சாரம் கொள்முதல் செலவு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலான மூன்று மாதங்களில் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும். இந்நிலையில், கடந்த மார்ச் 13ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த கர்நாடகா மின்சார ஒழுங்குமுறை ஆணையம், ஒரு யூனிட்டுக்கு 101 பைசா வரை 3 மாதங்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டது.

இதுகுறித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (KERC) தலைவர் ரவிக்குமார் கூறுகையில், “தொழில்நுட்ப காரணங்களால், மார்ச் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதல் செலவை (FPPCA) சரி செய்ய முடியவில்லை. அதனை மீட்டெடுக்க முடியாமல் போய்விட்டது. அதனை வசூலிப்பதற்கான அதிகாரத்தை விதிகள் வழங்கியுள்ளன. அந்த செலவை சரி செய்யாமல் விட விதிகள் அனுமதிக்காது. எனவே, அந்த தொகை வசூலிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

இலவசங்கள் என்ற பெயரில் பொதுமக்களுக்கான சலுகைகளை அளித்து விட்டு, மறுபுறம் மின் கட்டணம் உள்ளிட்டவற்றை அதிகரித்து அம்மாநில மக்கள் தலையில் அதிக சுமையை ஏற்றுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. கர்நாடக அரசின் இத்தகைய நடவடிக்கையால் அம்மாநில மக்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளனர்.

click me!