மே.வங்கத்தில் பாஜகவுக்கு ஓடியவர்கள் மீண்டும் திரிணாமூலில் சேர மம்தா பானர்ஜிக்கு கெஞ்சி கூத்தாடி கடிதம்..!

By Asianet TamilFirst Published Jun 2, 2021, 8:23 AM IST
Highlights

மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்குத் தாவிய திரிணாமூல் கட்சி தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் தங்களை திரிணாமூல் கட்சியில் சேர்க்கக் கோரி முதல்வர் மம்தாவுக்கு கடிதம் எழுதி கெஞ்சத் தொடங்கியுள்ளனர்.
 

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் பாஜகவுக்கு தாவினார்கள். எப்படியும் அடுத்த ஆட்சி பாஜகதான் என்று நினைத்து, அந்தப் பக்கம் போனார்கள். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் பிரமாண்ட வெற்றியை திரிணாமூல் காங்கிரஸ் பெற்றது. 2016 தேர்தலில் பெற்ற வெற்றியை அப்படியே தக்க வைத்துக்கொண்டது. இந்நிலையில் பாஜகவுக்குத் தாவிய முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள், மீண்டும் மம்தாவிடம் வர கெஞ்ச தொடங்கியுள்ளனர்.


பலரும் மம்தாவிடம் மறைமுகமாகக் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பாஜகவுக்குத் தாவிய முன்னாள்  எம்.எல்.ஏ. தீபேந்து பிஸ்வாஸ் மீண்டும் திரிணாமூலில் மம்தாவிடம் கெஞ்சி பகிரங்கமாக கடிதமே எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “உடைந்த இதயத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். உணர்ச்சிவசப்பட்டு தவறாக வேறொரு கட்சியில் சேர்ந்துவிட்டேன். மீன் எப்படி தண்ணீரை விட்டு இருக்காதோ, அப்படித்தான் தீதி நீங்களும் எங்களுக்கு, நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். நீங்கள் மன்னிக்கவில்லை எனில் நாங்கள் வாழ முடியாது. என்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளுங்கள். காலமெல்லாம் உங்கள் பாசத்தில் பிணைந்திருப்பேன்.
பாஜகவுக்கு செல்ல நான் எடுத்தது மோசமான முடிவு. கட்சியை விட்டு விலகியது உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு. தற்போது செயலிழந்து விடுவோம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், மீண்டும் திரிணாமூலுக்கே திரும்புகிறேன்” என்று மம்தாவுக்குக் கெஞ்சி கடிதம் எழுதியுள்ளார். இதேபோல திரிணாமூல் முன்னாள் தலைவர் சோனாலி குகாவும் கட்சியை விட்டு விலகி பாஜகவுக்குத் தாவியதற்கு மன்னிப்பு கேட்டு மம்தாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 

click me!