2029இல் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்: மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும் சட்ட ஆணையம்!

By Manikanda Prabu  |  First Published Feb 28, 2024, 5:04 PM IST

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 2029ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


இந்தியாவை பொறுத்தவரை நாடாளுமன்ற மக்களவைக்கும், மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கும் தனித்தனியாக தேர்தல்  நடக்கிறது. இதுதவிர உள்ளாட்சிகளுக்கும் தனியாக தேர்தல் நடைபெறுகிறது. ஆனால், ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பிறகு தீவிரமடைந்துள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் இரண்டிற்கும் சேர்த்து ஒரே தேர்தல் நடத்துவதாகும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடந்தால், மக்கள் ஒரே நேரத்தில் மூன்று வாக்குகள் செலுத்த வேண்டியது இருக்கும். ஒன்று மாநில சட்டமன்றத்திற்கு, இன்னொன்று நாடாளுமன்றத்துக்கு, மற்றொன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு. இதுபோன்று தேர்தல் நடத்துவதால் செலவு குறையும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படும் அதே வேளையில், இதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றன.

Tap to resize

Latest Videos

நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டால், அப்போது மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் முழு ஆயுட்காலம் முடியும் முன்னரே கலைக்கப்படுமா அப்படி கலைக்கப்பட்டால் அதற்கு மாநில அரசுகள் எப்படி எதிர்வினையாற்றும் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

இதனிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள், அரசியல் கட்சியினர்களிடம் சட்ட ஆணையம் கருத்து கேட்டது. அதேபோல், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிக்க 8 பேர் கொண்ட குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினரும் பொதுமக்கள், அரசியல் கட்சிகளிடம் இருந்து கருத்துக்களை கேட்டுப் பெற்றுள்ளனர்.

ராஜினாமா செய்யவில்லை: இமாச்சலப்பிரதேச முதல்வர் மறுப்பு!

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை 2029ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றம், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2029ஆம் ஆண்டில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஏற்றவாறு அடுத்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவைகளின் ஆயுட்காலத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும், அரசியலமைப்பில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை இணைக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் பரிந்துரைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவான பரிந்துரைகளையே வழங்கும் என தெரிகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இதனை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கான வழிமுறையை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!