
ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பாதிப்பை கருத்தில் கொண்டு அங்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக பொதுமக்களும், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகளும் தினந்தோறும் கற்களை வீசி வருகின்றனர். இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நகரின் ஓல்டு சிட்டி பகுதிக்கு உட்பட்ட 3 காவல்நிலைய எல்லைகள் பதற்றம் மிகுந்தவையாக கருதப்பட்டுள்ளது.
அங்கு ஊரடங்கு உத்தரவை நகர் மாவட்ட துணை ஆணையர் பரூக் அகமது நேற்று அமல்படுத்தி உள்ளார்.
நவ்கட்டா, எம்.ஆர். கஞ்ச் மற்றும் சபாகடல் ஆகிய இடங்களில் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது.
கல்வீச்சு சம்பவங்கள் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் நினைவாக பிரிவினைவாதிகள் ‘தியாகிகள் வாரத்தை’ கடை பிடிக்க உள்ளனர்.
அப்போது சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.