
வீர மரணம் அடையும் துணை ராணுவத்தினருக்கு தலா ரூ. 1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்பு படையில் ராணுவத்தினரை தவிர்த்து, ரிசர்வ் போலீசார், இந்தோ – திபெத் பாதுகாப்பு படையினர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் என 9 வகையான துணை ராணுவத்தினர் பணியாற்றி வருகின்றனர்.
எல்லை பாதுகாப்பு, மாவோயிஸ்ட் ஒழிப்பு உள்ளிட்ட பணிகளில் துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். குறிப்பாக மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் ரிசர்வ் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் கடந்த மாதம் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உள்பட மொத்தம் 25 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. இந்த நிலையில் சிக்கிம் வழியே செல்லும் இந்தியா – சீனா எல்லைப் பகுதியான நத்துலாவில் ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ராணுவ அதிகாரிகளிடம் பாதுகாப்பு வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செராதங் பகுதியில் இந்தோ – திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினருக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது:-
நாட்டின் நலனுக்காக துணை ராணுவத்தினர் தங்களது உயிரையே தியாகம் செய்து வருகின்றனர். இதனை ஒட்டுமொத்த நாடே பாராட்டுகிறது.
இனி துணை ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கப்படும்.
துணை ராணுவத்தின் தியாகத்தை ஒருபோதும் பணத்தால் ஈடுகட்ட முடியாது. இருப்பினும் வீர மரணம் அடையும் ராணுவத்தினர் எந்த பிரச்னையும் சந்திக்க கூடாது என்பதால்தான் இழப்பீடு வழங்கப்படுகிறது.
34 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் (கான்ஸ்டபிள்) தலைமை வீரர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவத்திற்கென்று மத்திய உள்துறை அமைச்சர் சார்பாக மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தங்களது பிரச்சினைகளை துணை ராணுவத்தினர் தெரிவிக்கலாம். இதன் மூலமாக அவற்றை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவில் தீர்க்கும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா – சீனா இடையே 3,488 கிலோ மீட்டர் தூரத்திற்கு நில எல்லை உள்ளது.
இதில் ஜம்மு காஷ்மீர் வழியே 1,597 கிலோ மீட்டரும், இமாச்சல பிரதேசத்தின் வழியே 200 கிலோ மீட்டரும், உத்தரகாண்டின் வழியே 345 கிலோ மீட்டரும், சிக்கிம் வழியே 220 கிலோ மீட்டரும், அருணாசல பிரதேசத்தின் வழியே 1,126 கிலோ மீட்டரும் எல்லை செல்கிறது.
இங்கு இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா – சீனா எல்லையில் 173 துணை ராணுவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.