21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் வாஜ்பாயின் உடல் தகனம்!

By vinoth kumarFirst Published Aug 17, 2018, 5:20 PM IST
Highlights

டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பசுஞ்சாண வரட்டிகள், சந்தனக்கட்டைகளை கொண்டு வாஜ்பாயின் உடல் எரியூட்டப்பட்டது.

டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பசுஞ்சாண வரட்டிகள், சந்தனக்கட்டைகளை கொண்டு வாஜ்பாயின் உடல் எரியூட்டப்பட்டது. வாஜ்பாயின் உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது பேத்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக வாஜ்பாயின் உடலுக்கு பிரதமர் மோடி கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினார். 

வாஜ்பாயின் உடலுக்கு முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். பிறகு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மன்மோகன் சிங், ராகுல்காந்தி ஆகியோர் அஞ்சலி இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முதுபெரும் அரசியல் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் நேற்று மாலை 5 மணி அளவில் காலமானார். 

வாஜ்பாய் காலமானதையடுத்து, அவரது உடல் கிருஷ்ண மேனன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து இன்று காலை 9.30 மணிக்கு வாஜ்பாய் உடல் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர், மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் வாஜ்பாயின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இறுதி ஊர்வலம் தொடங்கிய பாரதிய ஜனதா தலைமையகத்தில் இருந்து தகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட ஸ்மிருதி ஸ்தல் வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரம் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் நடந்தே சென்றனர். ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர். இறுதி ஊர்வலம் ஸ்மிருதி ஸ்தலில் அடைந்த பிறகு அங்கு ராணுவ இசை, வேத மந்திரங்கள் முழங்க தரைப்படை, விமானப்படை, கடற்படை என முப்படை வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினார். அரசியல் தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது உடல் எரியூட்டப்படும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் மீது போர்த்தப்பட்ட தேசியக் கொடி பேத்தி நிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து தகன மேடைக்கு கொண்டுவரப்பட்ட்டு தீ மூட்டப்பட்டது. 21 குண்டுகள் முழங்க வாஜ்பாய் உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது.

click me!