ஆதாருடன் பான் கார்டு இணைக்க இறுதி கெடு !! கடைசி தேதி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Dec 16, 2019, 7:12 AM IST
Highlights

ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைக்க  வரும் 31-ந் தேதி கடைசி நாள் என  வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

இந்தியாவில் வாழ்கிறவர்களுக்கு 12 இலக்க அடையாள எண் கொண்ட ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்படுகிறது.

மேலும் இது வங்கிக்கணக்கு தொடங்குவது  உள்ளிட்ட அனைத்து  அரசு திட்டங்களிலும், மானியங்களை பெறுவதிலும் ஆதார ஆவணமாக திகழ்கிறது.

இந்த ஆதார் எண்ணை வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணான பான் எண்ணுடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது.  மேலும், வருமான வரிச்சட்டம் பிரிவு 139 ஏஏ (2), பான் எண் பெற்றிருப்பவர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வருமான வரித்துறையிடம் தெரிவிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், பான் எண் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது .கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அவகாசம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் பான் எண் பெற்றிருக்கிற அனைவரும் ஆதாருடன் தங்களது பான் எண்ணை இணைப்பது கட்டாயம் என்றும், அதற்கு வருகிற 31-ந் தேதி கடைசி நாள் என்றும் வருமான வரித்துறை அதிரடியாக  அறிவித்துள்ளது.

click me!