
கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறீ்ர்களே என்று சொன்னீர்களே மோடிஜி , 50 நாட்களுக்குப் பின், மக்கள் தங்கள் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வீர்களா? என ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
கருப்பு பணத்தை ஒழித்து அனைத்து மக்களின் வங்கிக்கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வேன் என மோடி 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது உறுதியளித்திருந்தார்.
சமீபத்தில் ரூ.1000,ரூ.500 நோட்டை செல்லாது என அறிவித்த போதும் கூட பிரதமர் மோடி, பேசுகையில், 50 நாட்கள் மக்கள் தங்களுக்கு நேரும் சவுகரியக்குறைவுகளை பொறுத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் கருப்பு பணம் வெளிவந்துவிடும என தெரிவித்திருந்தார். அனைத்தையும் லாலுபிரசாத் கிண்டல் செய்து பேசினார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் நிருபர்களுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியது
கருப்பு பணத்தை ஒழிக்க ரூ.1000, ரூ.500 நோட்டை செல்லாதது என்ற அறிவிப்பால் நேரும் கஷ்டங்களை 50 நாட்கள் பொதுமக்கள் தாங்கிக் கொண்டாலும், மக்கள் தங்கள் கணக்கில் 15 லட்சம் ரூபாய் பெறப் போவதில்லை.
ஏனென்றால், பாரதிய ஜனதாவினர் கூறுவது போல்இது சர்ஜிக்கல் ஸ்டிரைக் அல்ல, முட்டாள்தனமான ஸ்டிரைக். சாமானிய மக்கள் மீது நடத்தப்பட்ட போலி என்கவுண்ட்டர்.
பிரதமர் மோடி உறுதியளிப்பது போல் அடுத்த 50 நாட்கள் மக்கள் பொறுமையாக இருந்தால், கருப்பு பணத்தை மீட்டு, அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சத்தை டெபாசிட் செய்துவிடுவாரா?
மோடியின் நோக்கம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று இருந்தால், ஏன் 2000ரூபாய் நோட்டை அறிமுகம் செய்தார்.
கோடிக்கணக்கில் வங்கியில் கடன் வாங்கிக் கொண்டு திருப்பிச் செலுத்தாமல் 5 நட்சத்திர ஓட்டலில் சொகுசாக தொழிலதிபர்கள் உட்கார்ந்து இருக்கிறார்கள், பொதுமக்கள் வங்கிகளின், தபால்நிலையங்களின்வாசலில் காத்திருக்கிறார்கள், அதை வெளிநாட்டில் இருந்து ரசிக்கிறீர்கள்.
மோசடிக்காரர்களும், எதற்கும் உதவாதவர்களும் தான் வரிசையில் நிற்கிறார்கள் என்று நீங்கள் சொல்வீர்களா?
நாட்டு மக்களை இப்படி பணத்தட்டுப்பாட்டில் சிக்க வைக்கும் போது, நீங்கள் சில நாட்கள் பொருத்திருக்க வேண்டும் என மக்களிடம் முதலில் கேட்டீர்கள்; நிதியமைச்சர் அருண்ஜெட்லி 15 நாட்கள் ; என்றார், இப்போது, நீங்கள் வார்த்தை மாறி 50 நாட்கள் பொருத்திருக்க கேட்கிறீர்கள். ஏழைமக்கள் பணம் இல்லாமல் போராடுகிறார்கள்.
பணத்துக்காக மக்கள் ஏ.டி.எம். வாசலில் நிற்கிறார்கள். பல நகரங்களில் மக்கள் ஏ.டி.எம். வாசலில் நிற்கும்போது, பணத்துக்காக சண்டையிடுகிறார்கள். ஏ.டி.எம். களில் பணம் இல்லையென்றால் அந்த எந்திரத்தை அடித்து சூறையாடுகிறார்கள். இது மிகவும் மோசமான விளைவாகும்.
கருப்பு பணத்துக்கு நானும் கூட எதிரிதான். ஆனால், அரசின் இந்த முடிவு செயல்படுத்துவதற்கு முன், திடீரென ஒருதலைபட்சமாக மாறிவிட்டது. இதனால், சாமானிய மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
வங்கிக்கணக்கில் இருக்கும் தங்களின் பணத்தை எடுக்க எத்தனை சாமானிய மக்கள் கூட்ட நெரிசலில் செத்து மடிந்தார்கள், உணவுஇன்றி, மருந்து மாத்திரைகள் இன்றி சுருண்டு விழுந்தார்கள் என்பது குறித்த பட்டியலை 50 நாட்களுக்கு பின் அரசு வெளிப்படையாக அறிவிக்குமா?
வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் தொழிலதிபர்களை பாதுகாக்கும் சூழ்ச்சித்திட்டம் இந்த திட்டம் இல்லை என்றால், பிரதமர் மோடி, அந்த தொழிலதிபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை கூற முடியுமா ?
மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ.1000, ரூ.500 மாற்றி 100 ரூபாய் நோட்டை பெற எத்தனை மணி நேரம் வரிசையில் காத்திருக்கிறார்கள் தெரியுமா?. மனித உழைப்பை வீணாக்கும் செயல்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.