
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அரிய வகை ‘நீலக் குறிஞ்சி பூ’ அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலம் மூணாறு மலைப்பகுதியில் மலர உள்ளது.
அதைக் காண வரும் பயணிகளுக்கான ஏற்பாடுகள் குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் முதல்வர் பினராயி விஜயன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மிகவும் அரிய வகை ‘நீலக் குறிஞ்சி மலர்’ இதற்கு முன் தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி, கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மூணாறு மலை ஆகியவற்றில் கடந்த 2006ம் ஆண்டு பூத்தது. அதன்பின் 12 ஆண்டு இடைவெளிக்குப் பின் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூக்க இருக்கிறது. இந்த பூக்கள் சீசன் அக்டோபர் மாதம் வரை நீடிக்கும்.
இந்த குறிஞ்சி மலர்கள் மூணாறு பூங்காவிலும், ரவிகுளம் தோட்டகலை பூங்காவிலும் வளர்க்கப்பட்டு வருகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சிப் மலரை பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருவார்கள். அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் பினராயி விஜயன் நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மேலும், குறிஞ்சி மலர்களை பார்க்க சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கவும், எத்தனை பேர் வருவார்கள் என்பதை கணக்கெடுக்கவும் தேசிய திட்டமிடல் மற்றும் ஆய்வு மையத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மூணாறு மலைப்பகுதி என்பது யுனெஸ்கோஅமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தங்குமிடங்கள், ஓட்டல்கள், ரிசார்ட்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ள நிலையில், அதை ஒழுங்கு வரையறைக்குள் கொண்டுவர கேரள அரசு முயன்றுவருகிறது.
குறிஞ்சி மலர்களை பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகள் வாகனங்களை ஒழுங்குபடுத்துவது,பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் பயன்படுத்துவதை தடை செய்வது, வாகனங்களை நிறுத்த இடவசதி செய்து கொடுப்பது, கழிவறை வசதி, இடங்களை சுகாதாரமாக பராமரிப்பது, மருத்துவ வசதிகள் செய்வது ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் விவாதித்தார்.
குறிப்பாக ரவிகுளம் தேசிய பூங்காவில் பூக்கும் குறிஞ்சி மலர்களை பார்க்க வரும் சுற்றுலாப்பயணிகளுக்கான நுழைவுச்சீட்டுகளை ஆன்-லைனில் விற்பனை செய்வது, கூடுதல் நேரத்தை பார்வையிட அனுமதிப்பது குறித்தும் பேசப்பட்டது. பயணிகளின் வசதிக்காக கூடுதல்பஸ்களை கொச்சி நகரம் வரை இயக்கவும் ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த ஆண்டு குறிஞ்சி மலர்களை பார்க்க 5 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பூங்காவில் 2250 பயணிகள் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றபோதிலும், நாளொன்றுக்கு 4 ஆயிரம் சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் எனத் தெரிகிறது.