மூடப்பட்ட கொச்சி விமான நிலையம்…. ஏர்போர்ட்டுக்குள் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் !!

By Selvanayagam PFirst Published Aug 16, 2018, 10:01 AM IST
Highlights

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் பேய் மழையால், கொச்சி விமான நிலையத்துக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வரும் 18 ஆம் தேதி வரை விமானநிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே  போன்று மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் இந்த பேய் மழையால் மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டம் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் நேற்றும் கனமழை பெய்தது. அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மாநிலத்தின் அணைகள் முழுவதும் நிரம்பி உள்ளன. எனவே 35 அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கி உள்ளன.



இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 15.74 லட்சம் லிட்டரும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 10 லட்சம் லிட்டரும் நீர் திறக்கப்பட்டு இருக்கிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம், முழு கொள்ளளவான 142 அடியை எட்டியதால் நேற்று அதிகாலையில் அணை திறக்கப்பட்டது.

தொடர்ந்து பெய்து வரும் மழையாலும், அணைகள் திறக்கப்பட்டு உள்ளதாலும் கண்ணூர், கோழிக்கோடு மலப்புரம், இடுக்கி, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அத்துடன் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது.



இந்நிலையில் இதனிடையே  மழைநீர் மற்றும் பெரியார் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் கொச்சி விமான நிலையத்தில் புகுந்துள்ளதால் விமான நிலையம் முழுவதும் செயல்பட முடியாத அளவிற்கு முடங்கியுள்ளது. இதன் காரணமாக சனிக்கிழமை பிற்பகல் 2 மணி வரை கொச்சி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சிக்கு வரும் சிறிய ரக விமானங்களை கடற்படை விமானத்தளத்தில் தரையிறக்க மத்திய அரசிடம் அனுமதி கோர கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல் கொச்சிக்கு வரும் பயணிகள் விமானத்தை மும்பைக்கு பதில் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டுக்கு திருப்பிவிடும்படி கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் மறு அறிவிப்பு வரும் வரை இருகாது என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதே போல் ரயில் போக்குவரத்து, பேருந்து சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது

click me!