தண்ணீர் கொடுங்கண்ணு கெஞ்சினது போய்….தண்ணீர் திறந்துவிடுங்க ப்ளீஸ்னு கெஞ்சுறாங்க…முல்லைப் பெரியாரைத் திறந்துவிட கேரளா கெஞ்சல்…

By Selvanayagam PFirst Published Aug 16, 2018, 8:39 AM IST
Highlights

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 142 அடியைத் தாண்டியுள்ளதையடுத்து , அணையைத் திறந்து நீர் மட்டத்தைக் 136 அடியாக குறைக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் 2014-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. மேலும், பேபி அணையை பலப்படுத்திவிட்டு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து 2014, 2015-ம் ஆண்டுகளில் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அதன்பிறகு போதிய மழைப் பொழிவு இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக நீர்மட்டம் 142 அடியை எட்டவில்லை.

இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர்மட்டம் அணையின் உயர்ந்தது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்று 142 அடியைத் தாண்டியது.

இதையடுத்து, அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 25000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்கிறது. அந்த அணையும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்படும் நீரின் அளவு அதிகமானால், அங்குள்ள குடியிருப்பு பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால் அணையின் நீர் மட்டத்தை குறைக்க பினராயி விஜயன் தனது  கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

click me!