தைரியம் இருந்தால் பகலில் வாருங்கள்... காலிஸ்தான் கொடி விவகாரம்.. இமாச்சல் முதல்வர் அதிரடி..!

Nandhini Subramanian   | Asianet News
Published : May 08, 2022, 02:07 PM IST
தைரியம் இருந்தால் பகலில் வாருங்கள்... காலிஸ்தான் கொடி விவகாரம்.. இமாச்சல் முதல்வர் அதிரடி..!

சுருக்கம்

பஞ்சாபில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் வேளையாக இது இருக்கலாம். இன்று இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய இருக்கிறோம்.

இமாச்சல பிரதேச சட்டமன்ற வளாகத்தின் நுழைவு வாயிலில் உள்ள கதவுகள் மற்றும் சுற்றுசவரில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்ட சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்த அம்மாநில முதல் அமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டு இருக்கிறார். தர்மசாலா பகுதியில் அமைந்து இருக்கும் இமாச்சல பிரதேச சட்டமன்ற வளாகத்தில் இன்று அதிகாலை வேளையில் காலிஸ்தான் கொடிகள் கட்டப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளில் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என இமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்து உள்ளனர். அருகாமையில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், உத்தரகாண்ட், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில எல்லை பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என முதல்வர் தாக்கூர் மேலும் தெரிவித்தார். இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

வழக்குப் பதிவு:

“இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலை வேளையில் நடைபெற்று இருக்க வேண்டும். சட்டமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த காலிஸ்தான் கொடிகளை அப்புறப்படுத்தி விட்டோம். பஞ்சாபில் இருந்து இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் வேளையாக இது இருக்கலாம். இன்று இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்ய இருக்கிறோம்,” என  கங்ரா பகுதிக்கான காவல் துறை தலைவர் குஷல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார். 

முன்னதாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்கில் உளவுத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. சிம்லாவில் பிந்த்ரன்வாலே மற்றும் காலிஸ்தான் கொடுகள் ஏற்றப்பட இருப்பதாக இமாச்சல பிரதேச முதல்வருக்கு சீக்கிய இயக்க தலைவர் குருபத்வாந்த் சிங் பன்னு கடிதம் எழுதி இருந்ததாக உளவுத் துறை வெளியிட்ட எச்சரிக்கை தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது என கூறப்படுகிறது. 

கண்டனம்:

“தர்மசாலா சட்டமன்ற வளாகத்தில் இரவு வேளையில் காலிஸ்தான் கொடுகள் கட்டப்பட்டு இருக்கும் சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். இங்கு குளிர்கால கூட்டத் தொடர் மட்டுமே நடைபெற்று வருகிறது. இங்கு அந்த சமயத்தில் மட்டும் அதிக பாதுகாப்பு இருந்தால் போதுமானது,” என இமாச்சல பிரதேச முதல்வர் தாக்கூர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்து இருக்கிறார்.

“பாதுகாப்பு போடப்படாததை பயன்படுத்திக் கொண்டு இந்த செயல் அரங்கேற்றப்பட்டு இருக்கிறது, ஆனால் இதனை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த செயலில் ஈடுபட்டவர்களிடம் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் பட்டப் பகலில் வந்து இந்த வேளையை செய்யுங்கள்," என அவர் மற்றொரு பதிவில் தெரிவித்து உள்ளார். 

PREV
click me!

Recommended Stories

பீகாரில் திருப்பதி கோயில்! 1 ரூபாய்க்கு 10.11 ஏக்கர் நிலம் வழங்கிய நிதிஷ் குமார்!
சாவு எப்படியெல்லாம் வரும் பார்த்தீங்களா! நியூயார்கில் இந்திய மாணவி உயிரி**ழப்பு! நடந்தது என்ன?