போட்டோ எடுக்க அருகில் சென்ற நபர்.. ஒரே போடு போட்ட சிறுத்தை... அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

By Kevin KaarkiFirst Published May 8, 2022, 12:01 PM IST
Highlights

டகுகானாவில் இருந்து வீட்டிற்கு திரும்ப கொண்டிருக்கும் போது சிறுத்தையை பார்த்த நபர், உடனே அதனை புகைப்படம் எடுக்க விரும்பினார். 

சிறுத்தையை க்ளோஸ்-அப் போட்டோ எடுக்க முயன்ற போது, சிறுத்தை தாக்கியதில் ஒருவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. புகைப்படம் எடுக்க முயன்ற நபரை சிறுத்தை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியில் கர்ஜன் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த வழியாக கூலித் தொழிலாளி ஒருவர் பணி முடித்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது தான் அந்த நபர் சிறுத்தையை பார்த்தார். டகுகானாவில் இருந்து வீட்டிற்கு திரும்ப கொண்டிருக்கும் போது சிறுத்தையை பார்த்த நபர், உடனே அதனை புகைப்படம் எடுக்க விரும்பினார். சிறு தொலைவில் இருந்த படி அந்த நபர் சிறுத்தையை புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார்.

சிறுத்தை அதிரடி:

இந்த நிலையில், ஆர்வ மிகுதியில் சிறுத்தையை க்ளோஸ் அப் புகைப்படம் எடுக்க அதன் அருகில் சென்று இருக்கிறார். புகைப்படம் எடுக்கப்படுவதை பார்த்து அதிர்ந்து போன சிறுத்தை, அந்த நபரை கடுமையாக தாக்கியது. சிறுத்தை தாக்கியதில், புகைப்படம் எடுத்துக் கொண்டு இருந்த நபரின் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. 

இதை அடுத்து அந்த பகுதியில் சிறுத்தை வந்துள்ள தகவல் அருகாமை பகுதிகளுக்கு காட்டுத் தீ போன்று பரவியது. இதன் காரணமாக பலர் சிறுத்தையை பார்க்க அங்கு கூடினர். கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து புகைப்படம் எடுத்த நபரை தாக்கியதோடு, அங்கு நின்று கொண்டிருந்தவர்களையும் சிறுத்தை துரத்தியது. இதை பார்த்து பயந்து போன மக்கள் கூட்டம் அங்கிருந்து வேக வேகமாக கிளம்பின. 

உடல் பரிசோதனை:

மேலும் சிறுத்தை பற்றிய தகவல் தின்சுகியா பகுதிக்கான வனத்துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை சமாதானம் செய்து, பாதுகாப்பாக பிடித்தனர். புகைப்படம் எடுத்த நபரை தாக்கியதை அடுத்து சிறுத்தைக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அதன் பின் வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

“அசாம் மாநிலத்தில் மனிதன் மற்றும் விலங்குகள் இடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது மிகவும் ஆபத்தான ஒன்று. காடுகள் மற்றும் வனப் பகுதி சுருங்கி வருவதை அடுத்து மனிதன் மற்றும் விலங்குகள் இடையே மோதல் அதிகரித்து வருகிறது” என வனத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

click me!