சமையல் எரிவாயுவை தொடர்ந்து மண்எண்ணெய் மானியமும் ரத்து !! மாதம் 2 முறை விலையை உயர்த்திக்கொள்ளவும் அனுமதி !!!

First Published Aug 4, 2017, 6:24 AM IST
Highlights
kerosine price will be increase


சமையல் எரிவாயுவை தொடர்ந்து மண்எண்ணெய் மானியமும் ரத்து !! மாதம் 2 முறை விலையை உயர்த்திக்கொள்ளவும் அனுமதி !!!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போது, மண்எண்ணெய் மானியத்தையும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மண்எண்ணெய் விலையை மாதத்திற்கு 2 முறை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மானிய சுமையை கொஞ்சம் கொஞ்சமாக  குறைக்கும் வகையில் மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அன்று ரேஷனில் வழங்கும் மானிய மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தியது. 5 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அப்போதுதான் விலை உயர்த்தப்பட்டது. அது முதல் குறிப்பிட்ட இடைவெளிகளில் மண்எண்ணெய் விலை அவ்வப்போது சிறிய அளவில் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே மண்எண்ணெய் விலை வெளிச்சந்தை விலைக்கு நிகராக வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதும் ஒரு லிட்டர் மண்எண்ணெய் வெளிச்சந்தை விலைக்கும், மானிய விலைக்கும் இடையிலான வித்தியாசம் ரூ.7-ஆக இருக்கிறது.

இந்நிலையில் மத்திய அரசு மாதம் இருமுறை ரேஷனில் வழங்கும் மானிய மண்எண்ணெய் விலையை லிட்டருக்கு 25 காசுகள் உயர்த்தும்படி எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு விலை உயர்த்தப்படும் பட்சத்தில் இந்த வித்தியாசம் நீங்க 14 மாதங்கள் ஆகும். அதாவது 28 முறை விலை உயர்வுக்குப் பின் மண்எண்ணெய் விலையும் வெளிச்சந்தை விலைக்கு நிகராக வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மண்ணெண்ணெய் மானியத் ரத்து செய்யும் முடிவுக்கு  மத்திய அரசு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தவிர, மண்ணெண்ணெய் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை 25 காசுகள் அதிகரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மண்எண்ணெய் பயன்படுத்துவது நாடு முழுதும் குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

 

 

click me!