
ரேஷன் கடைகளில் மானிய விலையில் மண்எண்ணெய் பெறவும் ‘அடல்பென்ஷன் யோஜனா’ திட்டத்துக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்று மத்திய அரசு நேற்று திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி மண்எண்ணெய் மானியத்தை பெறவும், அடல் பென்ஷன் திட்டத்தில் பணம் பெறவும் கண்டிப்பாக ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகச் சாலைகளில் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணை வழங்கப்படுகிறது. இதற்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மானியவிலையில் மண்எண்ணையை மத்திய அரசு வழங்குகிறது.
சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு மானியத் தொகை தற்போது நுகர்வோரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக அரசு செலுத்தி வருகிறது. அதேபோல,மண்எண்ணைய்கான மானியத் தொகையையும் நேரடியாக நுகர்வோர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது.
இந்த மானியத் தொகையைப் பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.இதனால் ரேஷன் அட்டைகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பணிகள் நடைபெற்று வருகின்றபோதிலும் இனி தீவிரப்படுத்தப்படும்.
ரேஷன் அட்டைகளை,ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் செப்டம்பர் 30ந்தேதிகாலக்கெடு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பொதுமக்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அட்டல் யோஜானா திட்டத்தின் பலன்களை பெறவும் ஆதார் அட்டை அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக ஆதார் அட்டைகளை பெறும் இறுதி தேதி இம்மாதம் 15-ந்தேதியுடன் முடிவடைகிறது என்று தெரிவித்துள்ளது.
புதிய ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கிஷான் பாஸ்புக், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் அளிக்கப்பட்ட அடையள அட்டை, மற்றும் வட்டாட்சியரின் சான்றுடன் தற்காலிகமாக இந்தப் பலன்களை அடைய முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த இரு திட்டங்களில் இருந்து பலன்கள் தவறான நபர்களுக்குெசன்றுவிடக்கூடாது என்பதற்காக ஆதார் எண்களை இணைக்க அரசு வலியுறுத்தியுள்ளது.