
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள இறைச்சிக்காக சந்தையில் மாடுகளை விற்க தடைவிதித்துள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் ஆலோசனைகளையும், கருத்துக்களை அளித்து வருகிறார்கள். அதை ஏற்று, அந்த உத்தரவை மறுபரிசீலனை செய்வோம், இதில் அரசுக்கு கவுரவப் பிரச்சினை ஏதும் இல்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் தெரிவித்தார்.
உத்தரவுக்கு எதிர்ப்பு
சந்தையில் இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்களை விற்பனை செய்ய தடைவிதித்து கடந்த வாரம் மத்திய அரசு விலங்குகள் வதைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதற்கு கேரளா, மேற்கு வங்காளம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. மக்கள் போராட்டத்தில் இறங்கி மாட்டிறைச்சி திருவிழாக்களை நடத்தினர்.
இடைக்காலத்தடை
மத்தியஅரசின் உத்தரவு, ஜனநாயகத்துக்கு விரோதமானது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்தார்.
இந்த மாடுவிற்பனை தடைச் சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற கிளையும் இடைக்காலத் தடைவிதித்துள்ளது.
பேட்டி
இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் நாள் தொடர்பான நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. அதில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஸ் வர்தன் கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
யாரையும் தாக்கவில்லை
மத்தியஅரசின் மாடு விற்பனை தடை உத்தரவுக்கு பல்வேறு தரப்பு மக்கள், அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மத்திய அரசின் இந்த அறிவிப்பு என்பது, எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரிந் உணவுப்பழக்கத்தையும், இறைச்சி வர்த்தகத்தையும் பாதிக்கும் நோக்கில் வௌியிடப்படவில்லை.
கவுரப்பிரச்சினை இல்லை
இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் அரசுக்கு ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். அவற்றை அரசு ஆய்வு செய்து, இந்த தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யும். இதில் அரசுக்கு எந்தவிதமான கவுரவப்பிரச்சினையும் இல்லை.
தவறான கருத்து
மிருகவதைச் சட்டத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்கள் அளித்துள்ளது, அதன் அடிப்படையிலேயே சில விதிமுறைகள் வரையரக்கப்பட்டுள்ளன. சமூகத்தில் குழப்பத்தை உண்டுசெய்யும் நோக்கில் சில குழுக்களால், தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தவறான கருத்துக்களையும் பரப்பிவிடப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.