
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்திக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, தனது தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில், நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை, உடனடியாக அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை செய்தபோது, பித்தப்பையில் கற்கள் இருப்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அமைச்சர் மேனகா காந்திக்கு அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பையில் உள்ள கற்களை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதையொட்டி, ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எனது தாய் மேனகா, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓரிரு நாட்களில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. என் தாயின் உடல் நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு வருண் கூறியுள்ளார்.