
பணி மாற்றம் செய்யப்பட்ட டிஜிபி சேனகுமாருரை மீண்டும் அதே பொறுப்பில் அமர்த்தவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது கேரள அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
பணிமாற்றம்
கேரளாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு டிஜிபி சேனக்குமாரை பணி மாற்றம் செய்தது. பணிமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
மேல் முறையீடு
இந்த வழக்கில் கேரள அரசு அவரை பணிமாற்றம் செய்தது தவறல்ல என உயர்நீதிமன்றம் தெரிவித்து விட்டது. இதனைத் தொடர்ந்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
மீண்டும் அதேபதவி
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் லோக்கூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறை இயக்குனர் சேனக்குமாரை கேரள அரசு தான்தோன்றித்தனமான முறையில் மாற்றம் செய்துள்ளது. எனவே அவரை மீண்டும் அதே பதவியில் அமர்த்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு கேரள அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை இயக்குனர் சேனக்குமாரை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் முடிவின் அடிப்படையிலேயே மாற்றம் செய்ததாகவும் ,அவருக்கு தண்டனை வழங்கும் வகையில் மாற்றம் செய்யவில்லை என்றும் கேரள அரசு செய்த வாதத்தை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
கேரள அரசு வாதம்
2016- ம் ஆண்டு கொல்லம் மாவட்டத்தில் உள்ள புட்டிங்கல் கோயிலில் நடைபெற்ற பட்டாசு வெடி விபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 110 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பணியை சரிவர செய்யாதிருந்த போலீசாரை டிஜிபி சேனக்குமார் காப்பாற்ற முயன்றார் என்றும் கேரள அரசு வாதிட்டது.
ஆனால் இந்த வாதங்களை எல்லாம் உச்சநீதிமன்றம் நிராகரித்து டிஜிபி சேனக்குமாருக்கு மீண்டும் அதே பதவி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது.