கேரளாவில் சத்தமில்லாமல் வேகமெடுக்கும் கொரோனா... முதல்வரின் சொந்த கிராமமும் ஹாட் ஸ்பாட் பகுதியானது..!

By vinoth kumarFirst Published May 26, 2020, 6:02 PM IST
Highlights

கேரளாவில் இன்று 67 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 964-ஆக உயர்ந்துள்ளதாக  முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் இன்று 67 பேருக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 964-ஆக உயர்ந்துள்ளதாக  முதல்வர் பினராயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவிலேயே கொரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்ட கேரள மாநிலத்தில் தொற்றுப் பரவல் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தாலும் நாளுக்கு நாள் அந்தக் கட்டுப்பாடுகள் தகர்ந்து கொண்டே போகின்றன. இதனால் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையில் ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

இது தொடர்பாக முதல்வர்  பினராயி விஜயன் கூறுகையில்;- இன்று கேரளாவில் மேலும் 67 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வந்த 27 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 33 பேர் உட்பட 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 964-ஆக உயர்ந்துள்ளது. 

தற்போது கேரளாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 359லிருந்து 415ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கேரளாவில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது. மேலும், கேரளாவில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு  அதிகரித்து வரும் நிலையில், இன்று அம்மாநிலத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி தேர்வுகள் நடைபெற்றன. 

இதனிடையே, கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா வெளியிட்ட அறிக்கையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராயி கிராமமும் கொரோனா தொற்றுப் பரவல் அதிகம் உள்ள ஹாட் ஸ்பாட் பகுதிக்குள் வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, கேரளாவில் ஹாட் ஸ்பாட்டுகளின் எண்ணிக்கை 59ஆக உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

click me!