Bipin Rawat Chopper Crash : கேரளாவின் ரியல் ஹீரோ..ஹெலிகாப்டர் விபத்தில் பலி.. சோகக்கடலில் கேரளா..

By Raghupati R  |  First Published Dec 10, 2021, 10:06 AM IST

கேராளாவின் ரியல் ஹீரோவான பிரதீப் குமார் நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த கேரளாவையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.


தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும், “வெலிங்டன் ராணுவ பயிற்சி” மையத்தில், பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்காக, நமது நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், டிசம்பர் மாதம் எட்டாம் தேதி, புதன்கிழமை காலை, கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அங்கு இருந்து, எம்.ஐ. -17 வி5 (MI-17 V5) ரக ஹெலிகாப்டரில், மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13 ராணுவ உயரதிகாரிகளான எல்.எஸ். லிடர், ஹர்ஜிந்தர் சிங், குருசேவக் சிங், ஜிதேந்திர குமார், விவேக் குமார், சாய் தேஜா, ஹவில்தார் சத்பால், பிரித்விராஜ் சௌஹான் தாஸ், பிரதீப் ஏ கே சிங், வருண் சிங் என 14 வீரர்கள் உடன் பயணித்த ஹெலிகாப்டர், எதிர்பாராத விதமாக விபத்துக்கு உள்ளானது.

Latest Videos

நாடு முழுவதும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தால், இந்திய மக்கள் அனைவரும் பெரிதும் வருந்தினர். உலக நாடுகளின் பல தலைவர்கள் கூட,  இந்தியத் துயரத்தில் பங்கேற்பதாக, தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து இருந்தனர். மருத்துவமனையில், உயர் தரப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட போதும்,  13 பேர் வீர மரணம் அடைந்தனர்.

குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும், 80 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, அவருக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில்,  தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. இதில் விமானப்படையில் ஜூனியர் வாரண்ட் ஆஃபிஸராக இருந்த பிரதீப் குமாரும் இறந்து இருக்கிறார். இவர் கேரளாவை சேர்ந்தவர்.திருச்சூர் மாவட்டம், புத்தூர், பொன்னுகரை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

இவரது தந்தை ராதாகிருஷ்ணன், தாய் குமாரி. இவருக்கு ஸ்ரீலட்சுமி என்ற மனைவியும், தக்‌ஷின் தேவ்,தேவபிரயாக் என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். புத்தூர் அரசு மேனிலைப் பள்ளியில் படித்து முடித்து விட்டு, 2004 இல் ராணுவத்தில் சேர்ந்தார்.பிறகு சொந்த ஊரில் வீடு கட்டி, குடியேறலாம் என்று திட்டமிட்டு இருந்தார் பிரதீப் குமார்.  இவரின் தந்தை ராதாகிருஷ்ணனுக்கு சுவாச பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அடிக்கடி வீட்டுக்கு வந்து கவனித்து கொண்டு இருந்தார்.இவருக்கு  வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

சமீபத்தில் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்புவதற்கு முன்பு, மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சந்தோசமாக கொண்டாடினார் பிரதீப் குமார்.கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு போன் செய்து பேசிய பிரதீப் குமார், முப்படை தளபதி பிபின் ராவத்துடன் செல்வதாக தனது தாயிடம் கூறினார்.இந்நிலையில் பிரதீப் குமார் விபத்தில் இறந்தது அவரது குடும்பத்தினரிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த செய்தி விபத்து நடந்த அன்றைய இரவு தான் தெரிவிக்கப்பட்டது.  

2018 கேரளா மழை வெள்ள பேரிடரின் போதும், உத்தரகாண்டில் மழை வெள்ளம் ஏற்பட்டபோதும், மீட்ப்புப்பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கேரளா முதல்வர் பினராயி விஜயன்,அமைச்சர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என அனைவரும் பிரதீப் குமாருக்கு வீர வணக்கங்களை தெரிவித்து வருகின்றனர்.வென்டிலேட்டரில் இருக்கும் தந்தைக்கு, மகன் இறந்த செய்தி கூட தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதீப் குமாரின் இந்த வீரமரணம் கேரள மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

click me!