International flight service : ஒமைக்ரான் எதிரொலி… ஜன.31 வரை வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து நீட்டிப்பு!!

By Narendran SFirst Published Dec 9, 2021, 8:17 PM IST
Highlights

வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமானத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இதன் காரணமாக, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை அடுத்து பேருந்து போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை முடங்கியது. அதுமட்டுமின்றி விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. எனினும், வெளி நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்களை மீட்கும் வகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானங்கள் இயக்கப்பட்டன. மேலும், அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் சர்வதேச விமானங்களை தவிர்த்து, அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. அதே சமயம், ஏர் பபுள் ஏற்பாட்டின் அடிப்படையில், சில கட்டுப்பாடுகளுடன் இந்தியாவிலிருந்து சில நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து பேருந்து போக்குவரத்து முழுமையாக சீரடைந்தது. பயணிகள் ரயில் சேவையும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ஆனால் விமான போக்குவரத்தை பொறுத்தவரை இந்தியாவின் உள்நாட்டு விமான சேவை சீரடைந்தாலும், வெளிநாடுகளுக்கு விமான சேவை சீராகவில்லை.

இதற்கிடையே, அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால், விரைவில், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை இயல்புநிலைக்கு கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இந்நிலையில் வணிக ரீதியான சர்வதேச பயணிகள் விமானச் சேவை, அடுத்த டிச.15 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் என்னும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது அண்டை நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரேஸில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. டிசம்பர் 15 ஆம் தேதிக்குள் புதிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்கு பரவினால் அந்த நேரத்தில் அதற்கேற்ப முடிவு மாற்றி அமைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இதற்கிடையே கொரோனோ பாதிப்பின் நிலவரம் மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் பேசிய பிரதமர் மொடி, டிசம்பர் 15 ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில் அதனை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் டிச.15 முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட சர்வதேச விமானங்கள் சேவை தொடங்கப்படாது என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவிப்பினை வெளியிட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

click me!