‘எங்கள் ஓட்டு தாமரைக்கே’... பழங்கால தேவலாயத்தை காக்க உதவிய பாஜக... சர்ச் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Mar 6, 2021, 10:44 AM IST

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் தங்களை கைவிட்ட நிலையில், களத்தில் இறங்கி கேட்காமலேயே உதவிய பாலசங்கருக்கு தான் எங்களுடைய ஓட்டு என சர்ச் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் செப்பாட் பகுதியில் உள்ளது செயிண்ட் ஜார்ஜ் ஆர்த்தோடக்ஸ் சர்ச்.  ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த சர்ச் கி.பி.1050ம் ஆண்டு கட்டப்பட்டது. இதனிடையே தேவாலயம் உள்ள சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரிவாக்கம் செய்து வந்தது. விரிவாக்கப் பணிக்காக சாலை ஓரத்தில் உள்ள தேவாலயத்தை இடிக்க வேண்டும் என நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பழங்கால தேவாலயத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். 

Latest Videos

தேவலாயத்தை இடிக்கும் உத்தரவை தடை செய்ய வேண்டுமென, கேரளாவை ஆளும் இடது சாரி கட்சிக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கும் சர்ச் நிர்வாகம் கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த பிரச்சனையை அறிந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் ஆர்.பாலசங்கர், எவ்வித பிரச்சனையும் இன்று சுமூக உடன்பாட்டை பெற்றுத் தந்துள்ளார். மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்ரியை நேரில் சந்தித்து, பிரச்சனையின் தீவிரத்தை விவரமாக விளக்கிக் கூறியுள்ளார். இதையடுத்து மத்திய தொல்லியல் துறையினர் தேவாலயத்தில் ஆய்வு மேற்கொண்டு, அது ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என சான்று கொடுத்தனர். 

எனவே 1000 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை இடிக்கும் முடிவு கைவிடப்பட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அதிகாரத்தில் இருப்பவர்கள் எல்லாம் தங்களை கைவிட்ட நிலையில், களத்தில் இறங்கி கேட்காமலேயே உதவிய பாலசங்கருக்கு தான் எங்களுடைய ஓட்டு என சர்ச் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 

இதுகுறித்து தேவாலய செய்தி தொடர்பாளர் ஜான்ஸ் ஆப்ரஹாம் கோனட் தெரிவித்திருப்பதாவது, “தேவாலயத்தில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த 47 சுவரோவியங்களும், 19ம் நூற்றாண்டில் தேவாலய தலைவராக இருந்த மலங்கரா மெட்ரோபாலிட்டன் பிலிப்போஸ் மர் டயனிசியஸ் உடலும் இங்கு தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பழம் பெருமை வாய்ந்த இந்த தேவாலயத்தை காக்க யாரிடம் எல்லாமோ உதவி கோரினோம். ஆனால் பாஜக தலைவர் பாலசங்கர் எங்களுக்கு தானாகவே முன்வந்து பிரச்சனையை தீர்த்து வைத்தார். அவர் வரும் தேர்தலில் செங்கனூர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்று அறிந்தோம். அப்படி அவர் போட்டியிட்டால்  அவருக்கு கிறிஸ்துவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம். அப்படி செய்யாவிட்டால் நாம் நன்றி மறந்தவர்கள் ஆகிவிடுவோம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

click me!