பள்ளி பாடப்புத்தகங்களில் 'இந்தியா’ என்பதை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் என்ற என்சிஇஆர்டி குழுவின் பரிந்துரையை கேரள அரசு நிராகரித்துள்ளது
பள்ளிப் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (என்.சி.இ.ஆர்.டி) சார்பில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் சமூக அறிவியல் பாடத்தை மாற்றி அமைப்பது குறித்து என்.சி.இ.ஆர்.டி. குழு ஆய்வு செய்தது. இதையடுத்து, பாடப் புத்தகத்தில் ‘இந்தியா’ என்ற பெயரை நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற அக்குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரசியல் சாசனத்தின் 1(1) ஆவது பிரிவில் இந்தியாவின் பெயர் ஏற்கெனவே பாரத் என்று உள்ளது. பாரத் என்பது பழங்கால பெயர். அதனால், அனைத்து வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்களில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் என உயர்நிலைக் குழு ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளதாக அக்குழுவின் தலைவரும், வரலாற்று ஆராய்ச்சி இந்திய கவுன்சில் உறுப்பினருமான ஐசக் தெரிவித்துள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளி பாடப்புத்தகங்களில் 'இந்தியா’ என்பதை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் என்ற என்சிஇஆர்டி குழுவின் பரிந்துரையை கேரள அரசு நிராகரித்துள்ளது. இது ஒரு மறைமுக செயல்திட்டத்துடன் கூடிய அரசியல் எனவும், இதனை தென் மாநிலத்தால் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கேரள சிபிஐஎம் அரசு கடுமையாக சாடியுள்ளது.
தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஸ்வநிதி திட்டம்; ரூ.9,152 கோடி கடன் - பிரதமர் பாராட்டு!
“சமூக அறிவியலுக்கான என்சிஇஆர்டி கமிட்டி அளித்த பரிந்துரைகளை கேரளா நிராகரிக்கிறது. அரசியல் சாசனத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்தியா அல்லது பாரத் என்ற வார்த்தையைப் பயன்படுத்த குடிமக்களுக்கு உரிமை உண்டு. வரலாற்றை திரிக்கும் நடவடிக்கையை கேரளா நிராகரிக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக, அறிவியலுக்குப் புறம்பாக, உண்மையான வரலாற்றைத் திரிபுபடுத்தும் விஷயங்களை பாடப் புத்தகங்கள் மூலம் குழந்தைகளுக்குக் கற்பிக்க என்.சி.இ.ஆர்.டி நினைத்தால், கல்வி ரீதியாக விவாதங்களை நடத்தி கேரளா தற்காத்துக் கொள்ளும்.” என அம்மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடைபெற்று முடிந்த ஜி20 மாநாட்டின்போது, உலகத் தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. அது தொடர்பான அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.