கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எம் சிவசங்கர் கைது செய்யப்பட்டார். லைஃப் மிஷன் எனும் ஊழல் வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இவர் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர் தங்க கடத்தல் மற்றும் டாலர் கடத்தல் வழக்குகளில் சிவசங்கர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உதவியுடன் வடக்கஞ்சேரியில் ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் ஒப்பந்தம் வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் சிவசங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்தம் பெற ரூ.4 கோடியே 48 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக காண்ட்ராக்டர் எம்.டி சந்தோஷ் ஈப்பன் வாக்குமூலம் அளித்திருந்தார். கேரள தங்க கடத்தல் வழக்கின் முக்கிய புள்ளியான ஸ்வப்னா சுரேஷுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையும் படியுங்கள்... கிணற்றில் விழுந்த சிறுத்தையைக் காப்பாற்றிய பெண் மருத்துவர்
இதையடுத்து நடந்த கிடுக்குப்பிடி விசாரணையில் ஸ்வப்னா சுரேஷ், ரூ.1 கோடி கமிஷனாக பெற்றதாக வாக்குமூலம் அளித்தார். ஆனால் இதைப்பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறி வந்த சிவசங்கர், தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக கூறியதோடு அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் இருந்து வந்தார்.
ஆனால் சிவசங்கருக்கு எதிராக உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக கூறி கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை அவரை நேற்று இரவு 11.45 மணியளவில் கைது செய்தது. மருத்துவப்பரிசோதனைக்கு பின்னர் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். சிவசங்கரை அமலாக்கத்துறை கைது செய்தது வரவேற்கத்தக்கது என்றும், இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் எனவும் முன்னாள் எம்.எல்.ஏ அனில் அக்காரா ஏசியாநெட் நியூஸுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார். சிவசங்கர் கடந்த மாதம் தான் பணியில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... பிரான்ஸ் நாட்டில் இருந்து 250 விமானங்களை வாங்கும் இந்தியா.! பிரதமர் மோடி - அதிபர் இம்மானுவேல் மேக்ரன் பேச்சு !