ராகுல் காந்திக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்!

By Manikanda PrabuFirst Published Apr 3, 2024, 2:36 PM IST
Highlights

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகளை கொண்ட கேரள மாநிலத்துக்கு வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

. ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பாக அக்கட்சியின் கேரள மாநில தலைவர் சுரேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா ஆகியோர் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ஆனி ராஜா இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தேசிய தலைவராவார். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசே கடுமையாக விமர்சனம் செய்தவர். மணிப்பூரில் சிறுபான்மை மக்களுக்கு நடந்த கொடுமைகளை அம்பலப்படுத்தியவர். இதுபோல ராகுல் காந்தி ஏதாவது செய்துள்ளாரா? ஆனால் அவர் கேரளாவுக்கு வந்து ஆனி ராஜாவை எதிர்த்து தேர்தலில் நிற்கின்றார். நாட்டில் அநீதிக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில் ஆனி ராஜா பங்கேற்பார். அது போன்ற கூட்டங்களில் ராகுல் காந்தி எங்காவது பார்க்க முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

எனது 3ஆவது ஆட்சி காலத்தில் ஊழல்வாதிகள் மீது இன்னும் வலுவான தாக்குதல்: பிரதமர் மோடி சூளூரை!

ராகுல் காந்தி, கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து போட்டியிடுவது பொருத்தமற்றது என நாட்டு மக்கள் விமர்சிப்பதாக தெரிவித்த அவர், பாஜகவை எதிர்த்து நேரடியாக வேறு தொகுதியில் ராகுல்  காந்தி போட்டியிட்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 2024இல் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி எனும் பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் அங்கம் வகித்தாலும் கூட, கேரள மாநிலத்தில் அந்த இரு கட்சிகளும் காலம் காலமாகவே எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகிறது.

காங்கிரஸின் கோட்டையான வயநாடு மக்களவைத் தொகுதி 2009ஆம் ஆண்டு முதல் அக்கட்சியின் வசம் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வயநாட்டில் வெற்றி பெற்று சிட்டிங் எம்.பி.யாக உள்ளார். அந்த தேர்தலில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றிருந்தார். அதேசமயம், அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் அவர் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!