கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி... விசா முறைகேடு வழக்கில் டெல்லி நீதிமன்றம் அதிரடி!!

By Narendran SFirst Published Jun 3, 2022, 5:25 PM IST
Highlights

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பஞ்சாபில் TSPL எனும் நிறுவனம் அமைத்து வரும் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் சீன நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத் தர, TSPL நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுமானப் பணிகள் தாமதமானதால் சீனப்பணியாளர்களின் விசாவை நீட்டிக்க TSPL நிறுவனம் மீண்டும் பாஸ்கர ராமனை அணுகியதாகவும் சிபிசி கூறியுள்ளது.

இது தொடர்பாக பாஸ்கர ராமனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கடந்த 18 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. உச்சநீதிமன்றம், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெளிநாடு சென்று திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை 16 மணி நேரத்தில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் ஆஜரானார்.

முன்னதாக, கார்த்தி சிதம்பரம் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீதிபதி இக்பால், கார்த்தி சிதம்பரத்தை வரும் 30 ஆம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்ததோடு, சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதனிடையே அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமின் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

click me!