கர்நாடகாவில் நேஹா ஹிரேமத் என்ற மாணவி ஃபயாஸ் என்ற சக மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரி வளாகத்தில் நேஹா ஹிரேமத் என்ற மாணவி ஃபயாஸ் என்ற சக மாணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தனது காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்த மாணவன் அந்த மாணவியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த மாணவி நேஹா ஹிரேமத், BVB கல்லூரியில் MCA படித்து வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் நேஹாவின் முன்னாள் வகுப்பு தோழர் ஆவார். இவர் சவடத்தி தாலுகாவில் உள்ள முனவல்லியைச் சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக அவர் நெஹாவை காதலிப்பதாக கூறி அவரை பின் தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரின் காதலை நேஹா ஏற்கவில்லை என்று தெரிகிறது.
காரில் வந்த காங்கிரஸ் நிர்வாகி மீது கொலைவெறி தாக்குதல்; போலீஸ் வலைவீச்சு
இந்த சூழலில் நேற்று கத்தியுடன் கல்லூரிக்கள் நுழைந்த நேஹாவை சந்திந்த ஃபயாஸ் தனது காதலை ஏற்கும்படி கூறியுள்ளார். ஆனால் அப்போதும் நேஹா அவர் காதலை ஏற்காததால் ஆத்திரமடைந்த ஃபயாஸ், நேஹா கழுத்தில் 7 முறை கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார். கல்லூரி வளாகத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. கல்லூரி அதிகாரிகளும் மற்ற மாணவர்களும் நேஹாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவமனையில் நேஹா இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஹூப்பள்ளியில் உள்ள வித்யாநகர் போலீசாரின் உதவியுடன் ஃபயாஸை போலீசார் பிடித்தனர். இதுகுறித்து ஹுப்பள்ளி-தர்வாட் காவல் ஆணையர் ரேணுகா சுகுமார் கூறுகையில், " மாலை 4.45-5 மணியளவில் பிவிபி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மாணவி நேஹாவின் முன்னாள் வகுப்பு தோழன் கத்தியால் தாக்கிய சம்பவம் நடந்தது. அவரும் அந்த கல்லூரியிலே படித்து வந்துள்ளார். அவர் நேஹாவை 6-7 முறை குத்தினார்.
இவர்கள் ஒன்றாக படித்ததால் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் என்பது நமக்கு தெரியும். விசாரணைக்கு பிறகே முழுமையான விவரங்கள் தெரியவரும்" என்றார்.
நேஹாவின் தாயார் கீதா ஊடகங்களிடம் கூறுகையில், "நான் அவளை அழைத்துச் செல்ல வந்தேன், அவளுடன் தொலைபேசியில் ஒருமுறை பேசினேன். நாங்கள் பேசிய ஐந்து நிமிடங்களுக்குள் குழப்பம் வெடித்தது, யாரோ அவர் கத்தியால் குத்தப்பட்டதாக கூறப்பட்டது.. நான் அவள் முகத்தைப் பார்க்கவில்லை. இன்னும் என் மகள் இறந்துவிட்டாள் என்று என்னால் நம்ப முடியவில்லை." என்று கூறினார்.
இதற்கிடையில், நேஹாவின் கொலைக்கு எதிராக ABVP மாணவர் சங்கத்தினர் சாலை மறியல் செய்தனர்.வித்யாநகர் காவல் நிலையத்திற்கு வெளியே இந்து ஆதரவு அமைப்புகள் மற்றும் பாஜக ஆதரவாளர்களும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் கர்நாடக பாஜக தனது அதிகாரபூர்வ சமூக வலைதளக் கணக்கில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் " காங்கிரஸ் ஆட்சியின் நோக்கம் அராஜகம், சட்டம் - ஒழுங்கு என்பது வெறும் கனவு. ஹூப்ளி பிவிபி கல்லூரி மாணவி நேஹா ஹிரேமத்தை கத்தியால் குத்தி கொன்றான் ஃபயாஸ். இன்னும் எத்தனை அப்பாவி இந்துக்களை உங்களின் திருப்திப்படுத்தும் ஆட்சிக்கு பலி கொடுப்பீர்கள் என்று பதில் சொல்லுங்கள்.” என்று தெரிவித்துள்ளது.