
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட வழக்கில் கர்நாடக எம்எல்ஏ கே.சி. வீரந்திராவுக்குத் தொடர்புடைய ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை (ED) முடக்கியுள்ளது. எம்எல்ஏ கே.சி. வீரந்திரா 'King567', 'Raja567' மற்றும் 'Lion567' போன்ற பல சூதாட்டத் தளங்களை நடத்தி வந்துள்ளார். மேலும் பல்வேறு சூதாட்ட நிறுவனங்களிடம் அவருக்கு தொடர்பு இருப்பது அண்மையில் அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.
ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி தங்கம் பறிமுதல்
இதனைத் தொடர்ந்து கே.சி. வீரந்திரா கைது செய்யப்பட்ட நிலையில், பெங்களூரு மற்றும் சல்லகெரேவில் அவரது வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அப்போது விஐபி பதிவு எண்கள் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் உட்பட ஐந்து சொகுசு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.12 கோடி ரொக்கம், ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம், 10 கிலோ வெள்ளி மற்றும் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.55 கோடி சொத்துகள் முடக்கம்
இந்த சோதனையை தொடர்ந்து தான் கே.சி. வீரந்திராவின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மொத்தம் ரூ. 55 கோடி மதிப்பிலான பணம் முடக்கப்பட்டுள்ளது. இதில் கே.சி. வீரந்திராவுக்குச் சொந்தமான 9 வங்கிக் கணக்குகள் மற்றும் ஒரு டீமேட் கணக்கில் இருந்த ரூ. 40.69 கோடியும், சூதாட்டப் பணத்தைப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்தப்பட்ட 262 'மியூல் கணக்குகளில்' (mule accounts) இருந்த ரூ. 14.46 கோடியும் அடங்கும். இந்த நடவடிக்கைகளின்போது வீரந்திரா அமலாக்கத்துறையின் காவலில் இருந்துள்ளார்.